தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வற்றல்மலையை சுற்றுலா தலமாக்கும் திட்டம் உள்ளதாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், ஞாயிற்றுக்கிழமை (நவ. 25) தர்மபுரிக்கு வந்தார். நல்லம்பள்ளி அருகே தடங்கம் கிராமத்தில் தொழில்பேட்டை (சிப்காட்) அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், அன்னசாகரம் ஏரி குடிமராமத்துப்பணி, நூலஹள்ளியில் நுண்ணீர் பாசனத்தில் போடப்பட்டுள்ள துவரை விதைப்பண்ணை வயல் உள்ளிட்ட பணிகளை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வற்றல்மலையை சுற்றுலா தலமாக மாற்ற, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பணிகள் முழுமை அடையாமல் இருந்தன. இப்போது, வற்றல் மலையை இயற்கைச்சூழல் சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
ஒவ்வொரு விவசாயிக்கும், அவர்களின் பண்ணை சார்ந்த வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம், வற்றல் மலையில் தொடங்கப்பட்டு உள்ளது. முதல்வரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் வற்றல் மலையில் உள்ள நீர்நிலைகளை சீர்படுத்தி, அங்கும் பெய்யும் மழைநீரை, அதிகளவில் நீர்நிலைகளில் சேகரித்து, நிலத்தடி நீராதாரத்தை பெருக்கினால், இப்பகுதி மேலும் வளர்ச்சி அடையும்.
சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், சிறு குடில்கள் அமைத்தல், வற்றல் மலையில் உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் 'சைக்கிளிங் ட்ராக்' அமைத்தல், குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடும் வகையில் காற்றாடி விடும் திருவிழா நடத்துவதற்கான மைதானம் உள்ளிட்ட பணிகளை செய்து முடித்தால், நகர்ப்புற மக்கள் பலர் இங்கு சுற்றுலா வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
நகர்ப்புற மக்களுக்கு விவசாயம் மீதான ஆர்வம் அதிகரிக்கவும் வற்றல்மலை சுற்றுலா தலம் உதவியாக இருக்கும். மேலும், வற்றல்மலையில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த மலைப்பகுதியில் உள்ள அனைத்து சிறு கிராமங்களையும் ஒரே ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு உரிய நேரத்தில் பரிசீலிக்கும். இவ்வாறு தலைமை செயலாளர் சண்முகம் கூறினார்.