
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றக்கோரி தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிக்கை:
’’தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை சரிசெய்ய வேண்டும் எனில் 03.07.2018 ஆம் தேதியில் போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது, போக்குவரத்து கழகத்திற்கு போதுமான நிதியினை ஒதுக்கவேண்டும். மேலும் நிர்வாகத்தில் பல மாற்றங்களும், பேருந்து வழித்தடத்தில் மண்டலங்களுக்கு இடையே அதிகமான கிலோ மீட்டர் ஓட்ட வேண்டும் என போட்டி போட்டுக்கொண்டு ஓட்டாமல், போதுமான இடைவெளிவிட்டு இயக்கினால் வருவாய் உயரும் சேவை துறையாக செயல்படும். போக்குவரத்து துரையின் சார்பாக நாள் ஒன்றுக்கு 22 ஆயிரத்து 456 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன்மூலம் 90 லட்சம் கிலோமீட்டர் ஓட்டப்படுகிறது. இதற்கு 18 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. நாள் ஒன்றுக்கு 12 கோடியே 76 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதற்கு மத்திய, மாநில அரசு வாட் (VAT) வரியாக 24.99% சதவிகிதம் செலுத்துவதன் மூலம், நாள் ஒன்றுக்கு 3 கோடியே 19 லட்சத்து 10 ஆயிரத்து 230 ரூபாயும், ஆண்டுக்கு 1148 கோடியே 76 லட்சம் ரூபாய் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்து வரி விதிப்பதை தவிர்க்கவேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்களிடம் இருந்து வருங்கால வைப்புநிதியாக பணிக்கொடை, LIC, PLI ஆகியவற்றிற்காக பிடித்தம் செய்யும் தொகையினை நிர்வாகம் அந்ததந்த இடத்தில் செலுத்தமால், தொழிலாளர்கள் ஓய்வு பெரும் போது அவர்களுக்கு சேரவேண்டிய தொகையினை கொடுக்கமுடியாமல் நிர்வாகம் திணறுகிறது (தவிக்கிறது). இதை ஒவ்வொன்றாக நிர்வாகம் சரிசெய்ய வேண்டும்.
பணிக்கொடை சட்டம் (GRATUITY) 1972 ன் படி போக்குவரத்து தொழிலாளி வாங்கும் ஊதியத்தில் வருடத்திற்கு 15 நாள் ஊதியமாக பணிக்கொடை ஊக்கத்தொகை நிர்வாகம் கொடுக்கவேண்டும். சராசரியாக ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு ரூபாய் 15 ஆயிரம் எனில், 1 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு, வருடத்திற்கு ரூபாய் 210 கோடி தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து நிர்வாக செலவுக்கு பயன்படுத்துகிறது. தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடையின் ஊக்கத்தொகையை நிர்வாகத்தால் கொடுக்கமுடியவில்லை. மேலும் தமிழக அரசு பணிக்கொடையின் ஊக்கத்தொகையை “ஆயில் காப்பீடு கழகத்தில்” பிரீமியமாக செலுத்திவிடுகிறோம் என 2011 ஆம் ஆண்டு போக்குவரத்து நிர்வாகம் போடப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில், 13வது சரத்தை அரசு ஒப்புதல் அளித்திருந்தால் இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது நிர்வாகம் பணப்பலங்களை உடனே கொடுத்திருக்கமுடியும். தற்போது தொழிலாளர்கள் பணிக்கொடை பெறுவதற்கு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்வதும், அதிகாரிகள் கூண்டில் ஏறுவதுமான அவலநிலையுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமெனில் 03.07.2018 ம் தேதி நடைபெறவுள்ள போக்குவரத்து மானியக் கோரிக்கையின் போது தமிழக அரசு, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை பணத்தை, ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பிரீமியமாக செலுத்தி, அதன்மூலம் தொழிலாளர்கள் ஓய்வு பெரும் அன்றே பணப்பலன்கள் வழங்கப்படும் என்ற உத்தரவை வெளியிட்டால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேதனை சற்று குறையும் என கேட்டுக்கொள்கிறேன்.