Skip to main content

கண்டனம் தெரிவித்த ஒன்றிய அமைச்சர்! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அறநிலையத்துறை! 

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Condemned Union Minister! The charity department put an end to the rumor!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் நாளை(22ம் தேதி)  ராமர் பெயரில் அன்னதானம், சிறப்பு பூஜை செய்ய தமிழ்நாடு அறநிலையத்துறை அனுமதி மறுப்பு என தகவல்கள் பரவின. 

இதற்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜனவரி 22ம் தேதியன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது . தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்து சமயம் அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோயில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை. தனியாருக்கு சொந்தமான கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்”என குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அனுமதி மறுத்துள்ளதாக வெளியான தகவல் வதந்தி எனவும், அதுபோன்று எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை எனவும், பொய்யான செய்தியை யாரோ பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.