திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அரங்கில் 5 மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்ட மண்டல அளவிலான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மேடையில் யார், யார் அமர்வது என்கிற புரோட்டாக்கால்படி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நாற்காலி போட்டுள்ளதாக தெரிகிறது. அந்த நாற்காலியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் வலதுப்பக்கம் எம்.பி, எம்.எல்.ஏக்கள் அமர வேண்டும் என ஸ்டிக்கர் ஒட்டினர். இடதுப்பக்கம் அதிகாரிகள் அமர்ந்தனர். அதில் மாவட்ட ஆட்சியர்க்கு கடைசி இடம் ஒதுக்கி நாற்காலி போடப்பட்டது. அவருக்கு அருகில் முன்னால் அமைச்சர்கள் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, ராமச்சசந்திரன் அமர்ந்தனர். பின்னால் அதிமுகவின் முன்னால் எம்.எல்.ஏக்கள் சேர்மன்கள் ஆக்ரமித்துக்கொண்டனர்.
இதில் அதிருப்தியானார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. அதை நாசுக்காக வெளிப்படுத்தினார். அதாவது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி, பள்ளிக்கல்வித்துறை உயர்அதிகாரிகள் நிகழ்ச்சிக்கான பேட்ச்சை கொண்டு வந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தந்தபோது அதை வாங்கி தங்களது சட்டையில் குத்திக்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மட்டும் வேண்டாம் என ஒதுக்கி தனது அதிருப்தியை காட்டினார் என்கிறார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள். இது அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விவாதமானது.