
தமிழக சட்டப்பேரவையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அவைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், ‘அமலாக்கத்துறை சொன்ன ரூ.1000 கோடி ஊழல்! டாஸ்மாக் ஊழலுக்கு பின்னணியில் உள்ள அந்த தியாகி யார்?’ என்று பதாகையுடன் சட்டையில் பேட்ஜ் அணிந்து வந்தனர். மேலும் டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ஆனால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அவையில் விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்திருகிறார். இதனைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். ஆனால், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மட்டும் வெளிநடப்பு செய்யாமல் அவையிலேயே இருந்தார். இந்த நிலையில் மாணிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிமுகவின் அந்த தியாகி யார்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “மறைந்த எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுக வை அதற்குப் பிறகு பொறுப்பேற்ற இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடியவர் சிக்கி இருக்கக்கூடிய வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக யாருடைய காலிலே விழுந்தார்களோ, விழுந்த நேரத்திலே நொந்து போய் நூடுல்ஸ் ஆக மாறி இருக்கக்கூடிய தொண்டர்கள் தான் தியாகிகளாக இருக்கிறார்கள். முதலமைச்சர் பதவி வாங்குவதற்காக யாருடைய காலில் விழுந்து அந்த அம்மையாரை ஏமாற்றினார்களோ அவர்தான் இன்றைக்கு தியாகியாக இருக்கிறார்.பதாகையில் இருந்த தியாகி என்ற வார்த்தைக்காக நான் கூறினேன் என்பதை அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.