சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21.01.2025) கலந்து கொண்டார். அப்போது, முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரத்தின் சொந்த நிதியிலிருந்து 12 கோடி ரூபாய் செலவில் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள லக்ஷ்மி வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களின் நிதி பங்களிப்பில் ரூ. 5 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் உருவச் சிலையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இவ்விழாவில், மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, கே.ஆர். பெரியகருப்பன், மு.பெ. சாமிநாதன், ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், கோவி. செழியன், சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். மாங்குடி, வி. முத்துராஜா, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் க. ரவி மற்றும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ளக் காரைக்குடி சென்றார். அப்போது அவர் மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும் வாகனத்தை விட்டு இறங்கினார். அச்சமயத்தில் அங்கிருந்த மக்களிடம் சென்று பேசினார். சிறிது தூரம் நடந்து சென்று மக்களின் வரவேற்பை பெற்றுக்கொண்டார். அங்கிருந்தவர்களிடம் கை குலுக்கி வணக்கம் தெரிவித்தார். குழந்தைகள் தூக்கிக் கொஞ்சினார். மேலும் குழந்தைகள், பெரியவர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதே போன்று பொதுமக்களும் செல்பி எடுத்துக்கொண்டனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
நாளை (22.01.2025) சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவச் சிலைகளும், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கவிஞர் முடியரசனுக்கு உருவச் சிலையும் அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் அவர், ரூ. 50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் உருவச் சிலையைத் திறந்து வைக்க உள்ளார்.