நெல்லை மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியரின் கையை வேதியியல் ஆசிரியை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது தளபதிசமுத்திரம். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ஸ்டெல்லா என்ற ஆசிரியை மாணவ மாணவிகளை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியை ரத்னாதேவி என்பவர் வேதியியல் ஆசிரியையை கூப்பிட்டு மாணவர்களை அவதூறாக பேசுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென வேதியியல் ஆசிரியை தலைமையாசிரியரின் கையை கடித்துள்ளார். இதனால் அழுது கொண்டே வெளியே வந்த தலைமை ஆசிரியை, ஏர்வாடி காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வேதியியல் ஆசிரியை மீது போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அந்த பள்ளியின் ஆசிரியர்களை ஒன்றாக அமரவைத்து வைத்து முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.