
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று (05.04.2025) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கடந்த 25 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக திருப்பத்தூரில் 37.8° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்ட்சமாக குறைந்தபட்ச வெப்பநிலையாக 20.6 செல்சியஸ் கோயம்புத்தூர் விமான நிலையம் பகுதியில் பகுதியில் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 3 முதல் 6° செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34 முதல் 38° செல்சியஸ் வரையிலும், தென் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33 முதல் 35° செல்சியஸ் வரையிலும், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31 முதல் 35° செல்சியஸ் வரையிலும், மலைப் பகுதிகளில் 19 முதல் 27 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதே சமயம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (06-04-2025) தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் (07-04-2025) முதல் 11ஆம் தேதி (11-04-2025) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.