Skip to main content

வீடியோ வெளியிட்ட ஷர்மிளா; பல்வேறு பிரிவுகளில் பாய்ந்த வழக்குகள்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Cases filed against driver Sharmila for criticizing female police

கோவை மாவட்டம் வடவள்ளிப் பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. 26 வயதான இவருக்கு தனது சிறுவயதில் இருந்தே வாகனங்கள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. அதன் நீட்சியாக, 2019 ஆம் ஆண்டில் இருந்து ஆட்டோ ஓட்டி வந்த ஷர்மிளா, கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று, உரிமமும் பெற்றுள்ளார். 

இந்நிலையில், கடந்தாண்டு மார்ச் மாதத்தில் விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஷர்மிளா, பயணிகள் மத்தியிலும் சோசியல் மீடியாவிலும் அதிகளவில் பிரபலமாக தொடங்கினார். அதே சமயம், கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவிற்கு தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள், அரசியல் தலைவர்கள் என ஷர்மிளாவை நேரில் சந்தித்து அவருடன் பேருந்தில் பயணம் செய்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, அந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஷர்மிளாவுக்கு அந்த வேலை மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. கடந்த ஜூன் மாதத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரான கனிமொழி ஷர்மிளாவின் பேருந்தில் ஏறி அவருடன் பயணம் செய்தார். 

இத்தகைய சூழலில், அந்தப் பேருந்தில் இருந்த பெண் கண்டக்டர் ஒருவர், கனிமொழி வந்த நேரத்தில் முகச்சுளிப்புடன் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஷர்மிளாவுக்கும் அவரது பஸ் உரிமையாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஷர்மிளா தனது ஓட்டுநர் பணியை துறந்தார். இந்நிலையில், இச்செய்தியை தெரிந்துகொண்ட நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன், ஓட்டுநர் பணியை இழந்த ஷர்மிளாவுக்கு புதிய கார் ஒன்றைப் பரிசாக வழங்குவதாகவும், இனி வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவோராக ஷர்மிளா தனது பயணத்தை தொடர்வார்" எனத் தெரிவித்திருந்தார். 

அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்த ஷர்மிளா, அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டார்.  இத்தகைய சூழலில், தற்போது கால் டாக்ஸி ஓட்டி வரும் ஷர்மிளா, இன்ஸ்டாகிராம், யூடிப் உள்ளிட்ட சோசியல் மீடியா தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். தான் வாகனங்கள் ஓட்டி வருவதையும் பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு அதிக லைக்ஸ்களை பெற்று வந்தார். 

அந்த வகையில், கடந்த 2ம் தேதியன்று கோவை மாவட்டம் சத்தி ரோடு சங்கனூர் சந்திப்பு அருகே தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சி1 காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி வாகன நெரிசலை சீர் செய்துகொண்டிருந்தார். 

இதனிடையே, அங்கு காரில் சென்றுகொண்டிருந்த ஷர்மிளா, போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, எஸ்.ஐ ராஜேஸ்வரி காரில் வந்த ஷர்மிளாவிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, அதனை வீடியோ எடுத்த ஷர்மிளா, "இந்த வீடியோல இருக்குற லேடி போலீஸ் வந்து வரப்போற வண்டியிலா வழிமறிச்சி. அவங்க கிட்ட ஃபைன் எதுவும் போடாம.. காசு வாங்குறாங்க. அதுவும் இல்லாம டிரைவர கெட்ட வார்த்தைல திட்டுறாங்க. இவங்க மேல ஆக்ஷன் எடுக்கணும். இதை எல்லாரும் ஷேர் பண்ணுங்க" என பெண் போலீசை கடுமையாக விமர்சித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

தற்போது இந்த வீடியோ வைரலான நிலையில், ஷர்மிளா தவறான நோக்கத்துடன் வீடியோ பதிவிட்டதாக கூறி எஸ்.ஐ. ராஜேஸ்வரி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஷர்மிளா மீது  IPC 506(i), 509, 66C information technoloy act இன் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இச்சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்