அம்பையின் மணிமுத்தாறு மலைப்பகுதியிலுள்ள மாஞ்சோலை எஸ்டேட்டில் செயல்பட்டுவந்த பி.பி.டி.சி. தேயிலைக் கம்பெனி தனது ஆயுட்காலமான 2028க்கு முன்பே 2024ல் தன் செயல்பாட்டை நிறுத்தியதோடு கம்பெனியை மூடியதுடன் பல தலைமுறையாய் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களின் கணக்கையும் முடித்துக் கொண்டது. வீடுகளை காலிசெய்ய நெருக்கடி கொடுத்தது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாஞ்சோலை உள்ளிட்ட நான்கு எஸ்டேட்களின் 250 தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசு தரப்பில் உதவுவதாக அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தனராம்.
இதற்கிடையே வாய்ப்பிற்காகக் காத்திருந்த வனதுறை மாஞ்சோலைப் பகுதியை காப்புக்காடு, பாதுகாக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட பகுதி என்ற வட்டத்திற்குள் கொண்டுவர, மாஞ்சோலை குடும்பங்களை தரையிறக்க நெருக்கடி தரும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்களாம். ஆயினும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாஞ்சோலை தொழிலாளக் குடும்பங்களுக்கோ தரையிறங்க மனமில்லையாம்.
இதனிடையே நெருக்கடியாக காலங்காலமாக மாஞ்சோலையில் செயல்பட்டு வந்த கம்பெனியின் மருத்துவம் மூன்று மாதத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாம். இதனால் மருத்துவ வசதிகிடைக்காமல் திண்டாடி வருகிற தொழிலாளக் குடும்பங்களுக்கு வாரம் ஒருமுறை மலைக்குச் செல்கிற அரசின் நடமாடும் மருத்துவமனையால் பயனில்லையாம்.
இதனையடுத்து, 3G தொலைத் தொடர்பை அரசின் பி.எஸ்.என்.எல். திடீரென்று துண்டித்துக் கொண்டதால் மலைக் குடும்பங்களால் உறவுகளையும், மற்றவர்களையும் தொடர்பு கொள்ள முடியாமல் போயிருக்கிறது. துண்டித்த தொடர்பு பற்றி பி.எஸ்.என்.எல் நிர்வாகத்திடம் தேயிலைத் தொழிலாளர்கள் நீட்டிக்க கோரிக்கை வைத்த போது 3G யை அடுத்து 4G வந்துவிட்டது. அதனால் துண்டிப்பு என்று தெரிவித்த நிர்வாகம், 4G கனெக்ஷனை மலைக்குத்தர வனத்துறை அனுமதி தரவில்லை என்று தெரிவித்து விட்டார்களாம்.
அங்குள்ள 250 குடும்பங்களின் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மேல்படிப்பைத் தொடர பணவசதியின்றித் தவிக்கும் தேயிலைத் தொழிலாளர்கள், அம்பை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பிள்ளைகளின் கல்விச் செலவையாவது ஏற்க வழி செய்யுங்கள் என்று கேட்டும் அதிகாரிகள் தரப்பில் பதிலில்லையாம். பல்வேறு வழிகளிலும் நெருக்கடி கொடுத்து தங்களை மலையிறக்க முயற்சி செய்கிற வனத்துறையினரால் தற்போது புல்லட்ராஜா யானையும் மாஞ்சோலை பக்கம் விடப்பட்டது விவகாரமாகியிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தின் சேரங்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள 48க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்தி விவசாய நிலங்களை அழித்தும், அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டும் அட்டகாசம் செய்து மக்களை அச்சுறுத்தியும் வந்தது புல்லட்ராஜா என்ற யானை. புல்லட் போன்ற ஸ்பீடில் செல்வதால் அந்த யானைக்கு புல்லட் என்ற பெயராம். மக்களின் கொந்தளிப்பிற்குப் பின்புஅந்த யானையை அங்குள்ள வனத்துறையினர் ஜன 24 அன்று இரவோடிரவாக யாருக்கும் தெரியாமல் அதிகாலை 4 மணியளவில் மனிமுத்தாறு வழியே மாஞ்சோலை அப்பர் கோதையாறு வனப்பகுதியில் கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிற புல்லட்ராஜா யானையால் அப்பர் கோதையாறு மின் உற்பத்தி கழகத்திற்குச் செல்கிற பணியாளர்கள் பயத்தில் இருப்பதோடு, அங்குள்ள மாஞ்சோலை தொழிலாளக் குடும்பங்களும் கதி கலங்கி இருக்கின்றனர் என்கிறார்கள். இதே போன்று கேரளாவின் மூணாறு பகுதியை அச்சுறுத்திய அரிசி கொம்பன் யானையை 2023 ஜூன் 5ம் தேதி வனத்துறையினர் இதே வனப்பகுதியில் கொண்டு வந்து விட்டது விவகாரமாகி அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது கவனிக்கத்தக்கது.