Skip to main content

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; அரசு பள்ளி ஆசிரியர்கள் கைது!

Published on 05/02/2025 | Edited on 05/02/2025
Krishnagiri Dt Bargur Near Govt Middle School girl child issue

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஒரு மாத காலமாகப் பள்ளிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டுக்குச் சென்று, ‘ஏன் பள்ளிக்கு வரவில்லை?’ எனக் கேட்டு அறிந்துள்ளார். அப்போது மாணவி கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மாணவி கர்ப்பம் அடைந்து கருத்தரிப்பு செய்திருப்பதாகப் பெற்றோர் தெரிவித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனடியாக இது குறித்து  கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில், மாணவி  படிக்கும் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷ் 3 பேரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதன் காரணமாகவே மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே போலீசார் இது தொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 ஆசிரியர்களைக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்குக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு கைது செய்யப்பட்ட 3 ஆசிரியர்களிடமும் டி.என்.ஏ. பரிசோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பள்ளியின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நம்பி பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் ஆசிரியர்களே இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுவது மிகப்பெரிய வேதனைக்கு உள்ளான விஷயம். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தெரிவித்தனர்.

முன்னதாக கடந்த சில மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி அருகே தனியார்ப் பள்ளியில், போலியாக  ஏற்பாடு செய்யப்பட்ட என்.சி.சி. பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கும், 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கும் உட்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்து தமிழகத்தில்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்