மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டு பின்பு விலகி தற்போது நாளை(06.02.2025) வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ளதால் இப்படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்துக்கு தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்துள்ளது. லைகா நிறுவனம் படம் வெளியாகும் முதல் நாளான நாளை(06.02.2025) மற்றும் மறுநாள்(07.02.2025) ஆகிய இரண்டு நாட்களுக்கு காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதை பரிசீலித்து நாளை மட்டும் ஒரு நாளைக்கு காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அந்த ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் வீதம் காலை 9 மணி முதல் இரவு 2 மணிக்குள் முடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.