சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரித்த நிலையில், 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெளியான வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அண்ணா பல்கலை வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.