கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. மேலும், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை வழக்கத்தில் கொண்டு வந்து கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டது.
கொரோனா போன்று வேகமாக பரவும் புதிய வைரஸ் ஒன்று சீனாவில் பரவி வருவதால் உலக மக்களையே அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. எச்எம்பிவி (HMPV) எனப்படும் மனித மெடாநிமோ வைரஸ் பாதிப்பால் சீனாவில் உள்ள பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளனர். எச்எம்பிவி, கொரோனா, ஃபுளு காய்ச்சல் ஆகிய நோய்கள் ஒரே நேரத்தில் தாக்குவதால் சீனாவே திணறி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் முதல்முறையாக இரண்டு குழந்தைகளுக்கு எச்எம்பிவி (HMPV) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளாத இரண்டு குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த 3 மாத பெண் குழந்தை, அதனைத் தொடர்ந்து 8 மாத ஆண் குழந்தை என இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மூன்று மாத குழந்தை டிஸ்சார்ஜ் ஆகி உள்ளது. தொடர்ந்து எட்டு மாத ஆண் குழந்தைக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எச்எம்பிவி (HMPV) தொற்று பாதிப்பின் அறிகுறிகளாக சுவாசக் கோளாறு, தொண்டை வறட்சி, சளி, மூச்சுத் திணறல் ஆகியவை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடியது. சாதாரண சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டது. 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சுவாசக் கோளாறு, நுரையீரல் கோளாறு உள்ளவர்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை தாக்கும் தன்மை கொண்டது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கான குறிப்பிட்ட சிகிச்சை முறையோ மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சளி, காய்ச்சலுக்கான மருந்துகள் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சரியான ஓய்வு கொடுக்கப்பட வேண்டும். தொற்றுக்கான அறிகுறிகள் பல நாள் தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
தடுப்பதற்கான முறைகள்:
சோப் பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவுதல்; அசுத்தமான கைகளால் முகத்தைத் தொடாமல் இருத்தல்; தனிமைப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணிதல்; அடிக்கடி தொடும் இடங்களை சுத்தம் செய்தல்.