
எச்.ராஜா மீது பாஜகதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்திறங்கிய கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அரசியலமைப்பு அதிகாரத்தை மீறி செயல்படும் ஆளுநரை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்றார். பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் ஒரு நபர் கமிஷன் அமைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி ஒரு கமிஷன் அமைத்தால் அதில் பெண்கள் இடம் பெற வேண்டும் என உள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றது. நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தும் கூட உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் அரசாங்கம் என்று ஒன்று இல்லையே.
சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்ய, நிலம் கையகப்படுத்துவது குறித்து திமுக ஆட்சியின்போது வீரபாண்டியார் தலைமையில் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. பின்னர் நிலம் கையகப்படுத்துவது நிறுத்தப்பட்டது. விமான நிலையம் விரிவாக்கத்திற்காக விவசாய நிலம் கையகப்படுத்தினால் கண்டிப்பாக திமுக எதிர்க்கும்.
அவதூறாக பேசி வரும் எச்.ராஜா மீது வழக்கு தொடரப்படுமா எனக் கேட்டதற்கு, அவர் மீது பாஜகதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மேல் அவரைப் பற்றி பேச விரும்பவில்லை என்றார்.
முன்னதாக விமான நிலையத்தின் நுழைவு வாயில் அருகே கனிமொழி எம்.பி.க்கு சேலம் மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.