திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. கரோனா காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சந்தை செயல்பட அனுமதி கிடைக்கவில்லை. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த இரண்டு வாரங்களாக சந்தை இயங்கி வருகிறது. இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வந்தனர்.
இதேபோல் தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் ஆடுகளை வாங்க வந்தனர். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்து ஆடுகளை வாங்கி சென்றனர். விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் கோழி, சேவல் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று இரவு முதலே வெளியூர் வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். விவசாயிகளும் வியாபாரிகளும் அதிகாலை முதலே சந்தைக்கு வரத் தொடங்கினர். இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் பல விவசாயிகள் கட்டுப்பாடுகளை மீறி முகக்கவசம் அணியாமல் வந்ததால் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உருவாகி வருகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் வார நாட்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி செய்து தருவதோடு மட்டுமல்லாமல் சந்தை வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனரா என்பதையும் கண்காணிக்க வேண்டும். அதேபோல குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.