
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு 36 வார்டுகளில் இருந்து திமுக, அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்றனர். 10.30 மணிக்குக் கூட்டம் துவங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் 10 45 மணியளவில் கூட்டம் துவங்கியது. இதனைக் கண்டித்து அதிமுகவினர் நகர மன்ற தலைவர் லட்சுமி பாரியை கூட்டத்தை முடிக்க அறிவிப்பு கொடுக்காமலேயே தேசிய கீதம் பாடச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய கீதம் பாடிக் கொண்டிருக்கும் போது கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியதால் கூட்டம் நிறைவு பெற்றதாக தேசிய கீதம் பாடப்பட்டது. ஆனால், தேசிய கீதம் பாடி முடித்த பின்னர் திமுக அதிமுக உறுப்பினர் இடையே வாக்குவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நகர மன்ற தலைவி லஷ்மி பாரி கூட்டத்திற்கான நன்றியை தெரிவித்து கூட்டத்தை நிறைவு பெற்றதாக அறிவித்தார். கூட்ட நிறைவு அறிவிப்பு மற்றும் நன்றியுரை வருவதற்கு முன்னே தேசிய கீதம் பாடப்பட்டது. தேசிய கீதம் பாடப்பட்ட பிறகும் கூட்டம் நடைபெற்று தலைவர் லட்சுமி பாரி நன்றி தெரிவித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தேசிய கீதம் பாடிக் கொண்டிருந்த போது நகர மன்ற தலைவர் அருகாமையில் அமர்ந்திருந்த நகராட்சி ஆணையாளர் துரை. செந்தில்குமார் அமர்ந்து சிரித்துக் கொண்டு உறுப்பினர்கள் சண்டையை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கவுன்சிலர்களும் தேசிய கீதத்தை மதிக்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கூட்டத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் வந்ததாகவும், ஆனால் தங்களை பேச விடாமல் திமுகவினர் தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம் சாட்டும் அதிமுக உறுப்பினர்கள் தற்போது கோடைக் காலம் என்பதால் குடிநீர் பிரச்சினை அரக்கோணத்தில் அதிகரித்துள்ளது எனவே அரக்கோணம் நகராட்சியில் உள்ள மக்களின் பிரச்சினையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.