நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அவருடைய நினைவிடம் உள்ள கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகம் நோக்கி அதிகாலை முதலே ரசிகர்கள் மக்கள் பிரபலங்கள் படையெடுத்து வருகின்றனர்.
முன்னதாக விஜயகாந்த் நினைவிடம் நோக்கி தேமுதிக கட்சி சார்பில் அமைதி பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை அதற்கான அனுமதியை மறுத்து இருந்தது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்பதன் காரணமாக காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. நினைவு நாளை ஒட்டி மரியாதை செலுத்த அதிகாலை முதலில் மக்கள் குவிந்து வரும் நிலையில் கோயம்பேடு ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில் தேமுதிகவின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நினைவு நாளை குருபூஜையாக கொண்டாட வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இன்று குருபூஜை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம். அதற்கு முறையாக தேர்தல் ஆணையத்தில் இருந்து பேரணியாக வருவதற்கு நாங்கள் அனுமதி கேட்டு இருந்தோம். நாங்கள் கடிதம் கொடுத்தது 5/12/2024. ஆனால் எங்களுக்கு மறுப்புச் செய்தி கொடுத்தது நேற்று மாலை 4 மணிக்கு.
நாங்கள் கொடுத்த கடிதத்திற்கு பிறகு ஐந்து நாட்கள் ஆறு நாட்களில் பதில் கொடுத்திருந்தால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகி இந்த பேரணிக்கு அனுமதி பெற்றிருப்போம். வேண்டுமென்றே திட்டமிட்டு காவல்துறை நேற்று எங்களிடத்தில் அனுமதி மறுப்பு என்ற செய்தி கொடுத்து இருக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசியல் வரலாற்றில் மறைந்த அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா அவர்களுக்கெல்லாம் நினைவு நாள் வந்தாலும் பிறந்தநாள் வந்தாலும் மெரினா பீச்சில் பேரணியாக நடப்பார்கள். இப்பொழுது எங்களுடைய பேரணியும் 500 லிருந்து 800 மீட்டர் தான். இதற்கு அனுமதி கொடுத்திருக்கலாம். அரசியல் காழ்ப்புணர்ச்சியா அல்லது காவல்துறையின் காழ்ப்புணர்ச்சியா என்று தெரியாது. ஒரு நல்ல மனிதர் நாட்டுக்காக வாழ்ந்த மனிதர்;எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்த மனிதர் எத்தனையோ தான தர்மங்களை செய்து மனிதர்; தமிழ்நாடு மட்டுமல்ல இலங்கையில் பாதிக்கப்பட்டாலும் குஜராத்தில் பாதிக்கப்பட்டாலும் ஆந்திராவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டாலும் ராணுவ வீரர் காயம் அடைந்தாலும் முதலில் நிதியைக் கொடுத்த தலைவர் விஜயகாந்த் தான். அப்படிப்பட்ட நல்ல மனிதனுக்கு இன்று காவல்துறை பேரணி நடத்த அனுமதி மறுத்து இருக்கிறது. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. இந்த செய்தியைப் பார்த்து முதல்வர் மாநகர ஆணையருக்கு இங்கிருக்கின்ற டிசிக்கும் உத்தரவை போட்டு பேரணியை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.