
திமுகவின் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருபவர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக்கத் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதன்படி இந்த வழக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் இந்த வழக்கில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் இந்த வழக்கு தொடர்பாக மறு சீராய்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வாறு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று (25.04.025) வழங்கியுள்ள தீர்ப்பில், “சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே இந்த வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகளை மீண்டும் பதிவு செய்து கடலூர் சிறப்பு நீதிமன்றம் விசாரணையைத் தொடங்க வேண்டும். இந்த வழக்கை விரைவாக விசாரித்து 6 மாதங்களில் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.