Skip to main content

கடலூர்  மாவட்டத்தில் 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்..! 

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

3 child marriages stops  Cuddalore district

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், இலையந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் கிரிதரன் என்பவருக்கும், கடலூர் மாவட்டம் ஜா.ஏந்தல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்று (23.06.2021) மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக இருவீட்டார் உறவினர்களும் திருமணத்திற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், குழந்தை திருமணம் நடைபெறுவதாக கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் சென்றது. அதன் பேரில் சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி, சைல்டு லைன் மாவட்ட ஆலோசகர் பார்த்தீபராஜ் ஆகியோர் வேண்டுகோளுக்கிணங்க, சிறுப்பாக்கம் போலீசார், மங்களூர் சமூகநல விரிவாக்க அலுவலர் பானுமதி ஆகியோர் விரைந்து சென்று மணமகள் உறவினர்களை சந்தித்து, "18 வயதுக்கு குறைவாக உள்ள பெண்களுக்குத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். மீறி திருமணத்தை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்ததுடன் திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள். மேலும், 16 வயது சிறுமியை அவரது பெற்றோருடன் நாளை கடலூர் சமூகநல அலுவலகத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதேபோல் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில் பெண்களின் நலன் காக்க 'லேடிஸ் ஃபர்ஸ்ட்' என்ற திட்டத்தில் 8220006082 என்ற காவல் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணில் தொடர்புகொண்டு திட்டக்குடி தாலுகாவில் 18 வயது நிரம்பாத சிறுமிக்குத் திருமணம் செய்துவைக்க பெற்றோர் முடிவு எடுத்துள்ளதாகவும், அதைத் தடுத்து நிறுத்தும்படியும் கொடுத்த தகவலின் பேரில், உடனடியாக வேப்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். மேலும் சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரை கூறி, மீறி திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

 

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா நாச்சியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் மாணிக்கம் (27) என்பவருக்கும் திட்டக்குடி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருப்பது குறித்து அப்பகுதி ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அதிகாரிக்குத் தகவல் அளித்தனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலர் சுகன்யா தலைமையிலான அதிகாரிகள் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டனர். அதனைத் தொடர்ந்து சிறுமி கடலூர் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்