Skip to main content

22 தொகுதி பட்டியல்; தொடங்கியது பாஜக - அமமுக தொகுதிப் பங்கீடு 

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
22 block list; BJP-AMMK Alliance has started

இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முதற்கட்டமாக ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருகிறது. அதேபோல் திமுக பணிக்குழு உறுப்பினர்களுடன் திமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கக் காத்திருக்கிறது. இந்நிலையில் பாஜக - அமமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், தற்போது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமமுக போட்டியிட விருப்பமான 22 தொகுதிகள் அடங்கிய பட்டியலை டெல்லி பாஜக தலைமைக்கு அனுப்பி உள்ளதாகவும் அதில் தேனி, சிவகங்கை, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, அரக்கோணம், ஆரணி, தென் சென்னை, வடசென்னை, சேலம், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற்றுள்ளது எனவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது பாஜக - அமமுக  தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதீனத்துக்கு மிரட்டல்; பா.ஜ.க நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
The court is acting on the bail plea of ​​BJP executives for intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு கடந்த 24ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்த போது, குடியரசு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் மற்றும் முன்னாள் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் அளித்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Next Story

இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்கு சதவீதம்; வெளியான விவரம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Details released on Second Phase Election Vote Percentage

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதில், இரண்டாம் கட்டத் தேர்தலில் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக  79.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 54.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிப்பூர் 78.78%, சத்தீஸ்கர் 75.16%, மேற்கு வங்கம் 73.78%, அசாம் 77.35%, ஜம்மு காஷ்மீர் 72.32%, கேரளா 70.21%, கர்நாடகா 68.47%, ராஜஸ்தான் 64.07%, மத்தியப் பிரதேசம் 58.26%, மகாராஷ்டிரா 59.63%, பீகார் 57.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (26-04-24) முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.