தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘’அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு இல்லை என ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்தார் என மு.க.ஸ்டாலின் கூறினார். அவர் பேசுகையில், அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் துணைவேந்தர் நியமனம் தவறானது என அரசியல் கட்சிகள், அமைப்புகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி என்ற முறையில் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தது அறிக்கை வெளியிட்டது. தனிப்பட்ட முறையில் தவறு என ஆளுநருக்கு கடிதம் எழுதினேன். அதுகுறித்து என்னிடம் ஆலோசிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். ஆளுநர் பன்வாரிலால், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தம்ம சூர்ய நாராயண சாஸ்திரி உள்பட மூன்று பேரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது.
பரிந்துரையின்படியே பெயர் தேர்வு செயது, நியமனம் செய்து உள்ளேன். அதில் தவறு கிடையாது என வாதிட்டார். அப்போது நாங்கள் சூர்ய நாராயண சாஸ்திரி மீது புகார்கள் உள்ளது, அவர் மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என வாதிட்டோம். அதற்கு ஆளுநர் நடவடிக்கை உண்மைதான், ஆனால் அது தொடர்பான விசாரணையில் தவறு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில்தான் அவர் நியமனம் செய்யப்பட்டது என்றார். எங்கள் தரப்பில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அலோசிக்க அழைப்பு விடுக்கப்பட்டது’’ என்றார்.