Skip to main content

அமமுக எல்லாம் ஒரு கட்சியா? பிறக்காத குழந்தைக்கு பேரு வெச்ச மாதிரி....- முதல்வர் பழனிசாமி நக்கல்!

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

அமமுக எல்லாம் ஒரு கட்சியே இல்லை. பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்ததுபோல் அமமுகவின் நிலைமை உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேலியாக குறிப்பிட்டார்.

 

edapadi palanisamy countered on ttv dinakaran


சேலத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், புதன்கிழமை (மார்ச் 20, 2019) நடந்தது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம்கட்டப் பணிகளை தொடங்க அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். 


ஏற்கனவே சட்டசபையில் தெரிவித்தபடி, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவோம். திமுக தேர்தல் அறிக்கை, பொய்யானது. அவர்கள் சொல்வார்கள்; ஆனால் செய்யமாட்டார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல. சொல்லமாட்டோம். ஆனால் செய்துவிடுவோம். தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடியை தமிழகத்திற்கு அழைத்துள்ளோம். நான்கு மாவட்டத் தலைநகரங்களில் பிரச்சார கூட்டங்களில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அமமுக எல்லாம் ஒரு கட்சியே இல்லை. இன்னும் பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்தது போல் இருக்கிறது அமமுகவின் நிலைமை. அக்கட்சி இன்னும் பதிவு செய்யப்படவில்லை. இன்னும் அவர்களுக்கு சின்னம்கூட கிடைக்கவில்லை. ஊடகங்களில் வெளியாவதெல்லாம் கருத்துக்கணிப்புகள் இல்லை. அது, கருத்து திணிப்பாகத்தான் இருக்கிறது. 


கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 3 இடங்களில்தான் அதிமுக வெல்லும் என்றார்கள். ஆனால், பத்து தொகுதிகளில் வெற்றி பெற்றோம். சென்ற மக்களவை தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றோம். இப்போது எங்கள் கூட்டணியில் உள்ள பாமக ஒரு தொகுதியிலும், பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. அவையும் சேர்த்து, இந்த தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'தியானம் செய்வதால் என்ன பாதிப்பு வரப்போகிறது'-டி.டி.வி.தினகரன் கருத்து

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
 'What harm will come from meditating' - TTV Dinakaran's opinion

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை முடியவுள்ளது. ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகம் வர இருக்கிறார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக மூன்று நாட்கள் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடப் போவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில், இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து தமிழகம் வர இருக்கிறார்.

பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சி தேர்தல் நடைமுறையை மீறும் செயல், எனவே ரத்து செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி வலியுறுத்தும் நிலையில் திமுக சார்பிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமீறல். இதன் மூலம் பிரதமர் மோடி  மறைமுகமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 'What harm will come from meditating' - TTV Dinakaran's opinion

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் இங்கு இருப்பவர்கள் எல்லாம் சோமாலியா நாட்டில் உள்ளவர்களை போல மாறி நிற்பது தான் நடக்கும். இப்பொழுது மலிவான அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதமர் வந்து அவர்பாட்டுக்கு தியானம் பண்ணுவதால் என்ன பாதிப்பு வரப்போகிறது. நல்ல விஷயம் தான். இதை நான் கூட்டணிக்காக சொல்லவில்லை பொதுவாகவே சொல்கிறேன்'' என்றார்.

Next Story

'எடப்பாடிக்கு அது கைவந்த கலை'-அமைச்சர் துரைமுருகன் பதில்

Published on 20/05/2024 | Edited on 20/05/2024
'False silence is the art of Edappadi' - Minister Durai Murugan's answer

காவிரி விவகாரத்தில் தீர்ப்பினை மீறி கேரளாவோ, கர்நாடகாவோ செயல்பட்டால் அதை உறுதியாக தமிழக அரசு எதிர்க்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்குமாறு அதிமுகவின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்கும் முயற்சி இதற்கு தமிழக அரசு  எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சனமும் செய்திருந்தார்.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கள்ள மவுனம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கைவந்த கலை. தமிழக அரசு தமிழகத்திற்கு கிடைக்க கூடிய காவிரி நீர் உரிமையை சட்டரீதியாகவும் அதே போன்று தமிழகத்தின் உரிமை என்ற அடிப்படையிலும் நிச்சயமாக பெறுவோம்.  ஏற்கனவே இது தொடர்பாக நடைபெற்ற டெல்லி கூட்டத்திலும் தமிழக அரசு வலியுறுத்தி இருக்கிறது. தொடர்ந்து வலியுறுத்தக்கூடிய நடவடிக்கை மாநில அரசு எடுக்கும். கேரளா, கர்நாடக காவிரி வடிநிலத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கண்காணிக்க ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. எப்பொழுதும் போல தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கிடைக்கக்கூடிய காவிரி நீர் கிடைப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கையும் மாநில அரசு செய்து வருகிறது' என தெரிவித்துள்ளார்.