
திருச்சியில் பாஜக இளைஞரணியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “காவி என்பது எந்தக் கட்சிக்கும் சொந்தம் இல்லை. காவியை எந்த கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது. பாஜக அதை சொந்தம் கொண்டாட விரும்பவில்லை. காவி நிறம் என்றால் அதை இவர்கள் தான் செய்திருப்பார்கள் என்று இவர்களாகவே முடிவு செய்துவிட்டார்கள். தேசத்தை நேசிக்கும் அனைவருக்கும் காவி என்பது பொது தான். காவி என்பது பாஜகவிற்கு பொது இல்லை. காவியை யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது.
கவர்னர் என்ன பேசினாலும் அரசியல் என்கின்றனர். உதாரணத்திற்கு கவர்னர் திருவள்ளுவர், திருக்குறளைப் பற்றிப் பேசுகிறார். பொதுமக்கள் யாருடைய கருத்து சரியோ அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள். கவர்னரைப் பொறுத்தவரை மாநில அரசின் மீது தனிப்பட்ட தாக்குதல் தனிப்பட்ட விமர்சனம் செய்யவில்லை. இதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம் இல்லை.
மாநிலம் சார்ந்த பிரச்சனைகள், தமிழகத்தில் முக்கியமான பிரச்சனை என்ன? திராவிடத்தைப் பற்றி கவர்னர் கருத்து சொன்னால் அதைக் கவர்னரின் கருத்து எனப் பாருங்கள். கவர்னர் சொன்னார் என்பதற்காக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? தேவையில்லை. சாமானிய மனிதன் அண்ணாமலை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அவர்கள் புத்தியை உபயோகித்து சரியா தவறா என முடிவெடுக்கின்றனர். அதனால் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்” என்றார்.