chennai high court

கூட்டுறவு கட்டிட சங்க நிதியில் ரூ.7 லட்சம் முறைகேடு செய்ததாக, தி.மு.க எம்.பி., ஆர்.எஸ். பாரதிக்கு எதிரான புகார் மீதான விசாரணையை, எட்டு வாரத்தில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய, செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை, நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்கத் தலைவராக இருந்த, தற்போதைய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி, நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்கத்தின் மூலம், வணிக வளாகம் கட்டியதில், 7 லட்சத்து 64 ஆயிரத்து 577 ரூபாய் முறைகேடு செய்ததாகக் கூறி, கூட்டுறவு சங்கங்களின் சட்டப்படி நடவடிக்கை எடுக்க, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

இதன்படி, இந்த முறைகேடு தொடர்பாக ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கு, கடந்த 2004-ம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதன் பின்னர், இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறி, இந்த முறைகேடு தொடர்பான விசாரணையை, ஆறு மாத காலத்துக்குள் முடிக்க, செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணை பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, நங்கநல்லூர் கூட்டுறவு கட்டிட சங்கத்தின் தற்போதைய தலைவர் வி.பரணிதரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த முறைகேடு தொடர்பான விசாரணையை 8 வார காலங்களில் முடித்து, அதன் அறிக்கையை அக்டோபர் 10-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.