Skip to main content

ஜெயலலிதா அளித்துச் சென்ற வாக்குகளின் சதவீதம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே உள்ளது: ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிக்கை

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

 

ஜெயலலிதா அளித்துச் சென்ற வாக்குகளின் சதவீதம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே உள்ளது என்று வேலூர் தேர்தல் முடிவு குறித்து அதிமுக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.
 

eps-ops



இதுதொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 

 
வேலூர் பாராளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க.வின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்து இருக்கின்றன.
 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மொத்தம் 4,77,199 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மிக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் என்றாலும் இது கழகத்தைப் பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கணத்திற்குள் அடங்கும் தேர்தல் முடிவு என்பதை யாரும் மறுக்க முடியாது.
 

வேலூர் பாராளுமன்ற தொகுதியின் தனித்தன்மை குறித்தும், அங்கு எத்தகைய சூழலில் வாக்குப்பதிவை அ.தி.மு.க. எதிர்கொண்டது என்பது பற்றியும், நன்கு அறிந்த அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும், வேலூர் தொகுதியில் 46.51 சதவீத வாக்குகளை கழக வேட்பாளர் பெற்றிருப்பதன் முக்கியத்துவம் தெளிவாகப் புரியும்.
 

அ.தி.மு.க.வின் தலைமையில் தேர்தல் களம் புகும் அணிதான் தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய வெற்றிக்கனியை பறிக்கும் என்பதைத்தான் வேலூர் தொகுதியில் கழகம் பெற்றிருக்கும் வாக்குகள் உணர்த்துகின்றன.
 

புரட்சித்தலைவி அம்மா அளித்துச் சென்ற வாக்குகளின் சதவீதம் சிந்தாமல் சிதறாமல் நம்மிடம் அப்படியே உள்ளது என்பதைத் தான் வேலூர் தொகுதியில் இரட்டை இலை பெற்றிருக்கும் வாக்குகள் பறை சாற்றுகின்றன.


 

இத்தகயை மகத்தான உண்மையை உலகுக்கு உணர்த்திட, வேலூர் பாராளுமன்றத் தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு அல்லும் பகலும் அயராது பாடுபட்ட அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக செய்தி தொடர்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல். ஏ.க்கள், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளுக்கும், தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்திட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும், எல்லாவற்றுக்கும் மகுடமாய் விளங்கும் வேலூர் தொகுதியில் “இரட்டை இலை” சின்னத்திற்கு வாக்களித்த பெரியோர்களுக்கும், தாய்மார்களுக்கும், இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
 

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும், வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம், ஓங்குக புரட்சித்தலைவர் தந்த வெற்றிச் சின்னமாம் “இரட்டை இலை” சின்னம்.
 

இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்