அரசு நிகழ்ச்சிக்கு சென்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்து, தன் காலில் இருந்த செருப்பைக் கழற்ற வைத்தது விவாதமானது. இது நடந்தது முதுமலையில். கொஞ்சமும் சமூக அக்கறையில்லாத இந்த நிகழ்வைப் போலவே, இன்னொன்றும் அரங்கேறி இருக்கிறது. இது திருவண்ணாமலையில்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு எதிரில், வேங்கிக்கால் ஏரிக்கரையில் ரூ.3 கோடி செலவில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 06-ந்தேதி நடைபெற்ற இந்த விழாவிற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அற நிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் வருவதாக இருந்தது.
காலை 8:30-க்கு நடக்கும் இந்த விழாவிற்காக, 6:30 மணிக்கெல்லாம் அக்கம்பக்கத்து பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளை கல்வித்துறை மூலமாக அழைத்து வந்திருந்தனர் அதிகாரிகள். ஆனால், அமைச்சர்கள் சொன்ன நேரத்திற்கு வரவில்லை. நேரம் செல்லச்செல்ல வெயிலும், பசியும் குழந்தைகளை வாட்டியது. இதைப் பார்த்த செய்தியாளர்கள் அரசு பி.ஆர்.ஓ.விடம் தகவல்சொல்ல, அவர் ஆட்சியர் கந்தசாமியிடம் "குழந்தைகளுக்கு பிஸ்கட், தண்ணீர் கொடுத்தா நல்லா இருக்கும்' என்று கூறினார்.
இதைக்கேட்டு, காலில் சுடுநீர் ஊற்றியதுபோல குதித்த உள்ளாட்சித்துறை திட்ட அலுவலர் ஜெயசுதா, "அமைச்சர் வர்ற நேரம்... அவர்தான் முக்கியம்' எனக் கத்தினார். "பிள்ளைங்க பசியில் இருக்காங்க. ஏதாச்சும் ஆச்சுனா பிரச்சனைதான்...' எனக் கூறியும் ஜெயசுதா விட்டுக் கொடுக்கவில்லை. இதில் ஆட்சியர் கந்தசாமி தலையிட்ட பிறகே, ஜெயசுதா வேண்டா வெறுப்போடு உணவும், தண்ணீரும் ஏற்பாடு செய்தார்.
10:45க்கு வந்த அமைச்சர்கள் 11:15-க்கெல்லாம் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். வெறும் அரைமணி நேரக் கூத்துக்காக குழந்தைகளை வெயிலில் காயப்போட்டதை விடவும், ஒரு பெண் அதிகாரியே அதற்கு துணைபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.