Skip to main content

“அரசு மருத்துவருக்குக் கூட பாதுகாப்பு இல்லை” - இபிஎஸ் கண்டனம்!

Published on 13/11/2024 | Edited on 13/11/2024
Edappadi palaniswamy condemns about chennai government doctor stabbled

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை, இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தியதில், புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த தனது தாயாருக்கு சரியான சிகிச்சைவில்லை எனக் கூறி பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த சம்பவம் எதிரொலியாக, அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன. அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.

கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம். கத்திக் குத்தால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், தனது ஆட்சியின் எல்லா தவறுகளையும் ஏதேனும் மாய விளம்பர பிம்பத்தைக் கொண்டு மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை விடுத்து, இனியாவது முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். 

சார்ந்த செய்திகள்