சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் கிரிதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், 6 வயதில் வைஷ்ணவி என்ற மகளும், ஒரு வயதில் சுதர்சன் என்ற மகனும் உள்ளனர். இதில் கிரிதரனும், அவரது மனைவி பவித்ராவும் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இவர்கள் குடியிருக்கும், அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏராளமான எலித் தொல்லை இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடுகளில் பல்வேறு இடங்களில் எலிகளை ஒழிக்கக் கூடிய மருந்துகளை வைத்துள்ளனர்.
இதனையடுத்து இந்த மருந்தில் உள்ள வேதிப்பொருட்கள் காற்றில் பரவி அறையில் இருந்த நான்கு பேருக்கும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நான்கு பேரும் குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே சமயம் கிரிதரன் மற்றும் மனைவி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேற்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காற்றில் பரவிய எலி மருந்தின் நெடி காரணமாக இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் குறித்துக் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக எலியைக் கட்டுப்படுத்த மருந்து வைத்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு வீட்டில் மருந்து அடித்த தினகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கவனக்குறைவாகச் செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்துதல் பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக நச்சு, மருந்தில் இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தடயவியல் துறை துணை இயக்குநர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக எலி மருந்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஏசி அறையில் எலித் தொல்லையாக வைக்கப்பட்ட மருந்தின் ரசாயனம் பரவி மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வீட்டில் எலி மருந்தின் நெடி அதிகமாக இருந்தால் முகக் கவசம் அணிந்து சென்று தடயவியல் உதவித்துறை இயக்குநர் ஜெயந்தி ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.