Skip to main content

கூட்டணி கட்சிகளால் செல்வாக்கை இழந்து வரும் பா.ஜ.க - தேர்தல் களத்தை விவரித்த பால்கி!

Published on 14/11/2024 | Edited on 14/11/2024
Balki shared about Maharashtra and Jharkhand elections

முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் பால்கி, அரசியல் தொடர்பான பல்வேறு தகவல்களை நமது நக்கீரன் நேர்காணல் வாயிலாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் கள நிலவரங்களை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.

மகாராஷ்டிராவிலுள்ள 288 தொகுதிககளில் வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்திக்கிறது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கூட்டணி கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் மகளிர்கள் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்யும் திட்டங்களை அறிமுகப்படுத்துவோம் என்று பா.ஜ.க. கட்சி தேர்தலில் வாக்குறுதி கொடுத்திருக்கிறது. இதே திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தும்போது பெண்களை ஏமாற்றுவதற்காகக் கொண்டு வரப்பட்ட திட்டம் என்று தமிழ்நாடு பா.ஜ.க.வினர் விமர்சித்தது நினைவுக்கு வருகிறது. மாகாராஷ்டிராவில் ஆளும் ஏக்நாத் ஷிண்டே - பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் முயற்சியில் உள்ளனர். இப்போது அங்கு கடைசி நேரத்தில் கூட கட்சி தாவி வாபஸ் பெறும் நிலைமையில்தான் வேட்பாளர்கள் இருக்கின்றனர்.

ஷிண்டேவுக்கு செல்வாக்கு இருக்கும் தொகுதிகளை அஜித் பவார் கேட்டிருக்கிறார். இது பா.ஜ.கவுக்கு அங்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஷிண்டே மற்றும் அஜித் பவார் நடவடிக்கைகளால் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. செல்வாக்கை இழந்திருக்கிறது என்று ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வருகிறது. பிரதமர் மோடி மகாராஷ்டிராவுக்கு வரும் திட்டங்களைக் குஜராத்துக்கு கொடுத்துவிட்டுத் தான் அங்கு ஓட்டு கேட்டு வருகிறார். மாகாராஷ்டிராவில் அத்தியாவிசய பொருட்கள் கிடைக்காமல் நிறைய மாவட்டங்கள் இருக்கிறது. அடிப்படை பிரச்சனைகளைப் பிரச்சாரத்தின்போது மோடி பேசவில்லை, உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான பரப்புரையைத்தான் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட ரூ.16,000 கோடிக்கு மேற்பட்ட மூலதனத்தை குஜராத்துக்கு மட்டும் மோடி கொடுத்திருப்பது ஆரோக்கியமான அணுகுமுறை கிடையாது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வருவது பகல் கனவாகத்தான் முடியும்.

ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் முதற்கட்டமாக 43 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வரும் நவம்பர் 20ஆம் தேதி மீதமுள்ள 31 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணியமைத்துள்ளது. அதே போல் பா.ஜ.க, ஏ.ஜே.எஸ்.யூ, ஐக்கிய ஜனதா தளம், எல்.ஜே.பி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளது.

ஜார்கண்டை மாநிலத்தை பொறுத்தவரைக் கடந்த 20 வருட வளர்ச்சியை ஆளும் ஒன்றிய அரசு ஏற்படுத்தித் தரவில்லை என்பது மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்களின் குற்றச்சாட்டாகவுள்ளது. என்கவுண்டர் மற்றும் சுரங்கங்கள் அதிகம் இருக்கும் மாநிலம் ஜார்கண்ட். சுரங்கங்களை மடைமாற்றம் செய்யும் ஒப்பந்த மீறல்கள் அங்கு அதிகமாக இருக்கிறது. ஜார்கண்ட் எல்லைப்பகுதிகளில் இருக்கும் சில வளர்ச்சியடைந்த பகுதிகளை அவசரச் சட்டத்தின் மூலமாக பறித்துக்கொண்டதை ஜார்கண்ட் மலைவாழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த மலைவாழ் மக்களுக்கு 13 தொகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. அது வெற்றியைத் தீர்மானிக்கும் ஓட்டுகளாக இருக்கிறது.

முஸ்லீம்கள் அங்கு 9 தொகுதிகளில் செல்வாக்கு நிறைந்தவர்களாக இருக்கின்றனர். அந்த முஸ்லீம்களை குறி வைத்து அஸ்ஸாம் முதல்வர், சவுகான், அமித்ஷா, மோடி ஆகியோர் தாக்கி வருகின்றனர். அங்குள்ள முஸ்லீம்களுக்குக் காங்கிரஸ் உதவி வருவதால் முஸ்லீம்கள் என்ற போர்வையில் பயங்கரவாதிகளை அங்கு இறக்கி இந்திய ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டு மத வெறுப்பு உணர்வை பேசிவருகிறார்கள். இந்த தவறை உணர்த்தும் விதமாக இந்தியா கூட்டணி குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்தும் அது கிடப்பில் இருக்கிறது.  சோரன் குடும்பத்தில் இருக்கும் ஒரு நபரை பகடையாகப் பயன்படுத்தி அவரை பா.ஜ.க. கூட்டணிக்கு மாற்றி அவர்கள் வேலை செய்து வருகின்றனர். இருப்பினும் வேட்பாளர் அறிவிப்பில் பயங்கர சிக்கல் உருவாகியிருந்தது.

இதனால் அவர்களுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் பகுதிகளில் அவர்கள் அறிவித்த வேட்பாளர்களை  பா.ஜ.க. கூட்டணியில் இருப்பவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. கல்பனா சாரால் கொஞ்சம் படித்தவர் என்பதால் மலைவாழ் மக்கள் மொழியில் பேசி வாக்கு சேகரித்திருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது. இடது சாரிகள் தனியாகப் போட்டியிட்டாலும் அவர்களின் சின்னத்தை சுமந்து சென்று இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு ஓட்டுகேட்டனர். ஜே.எம்.எம். மீது மோடி குற்றச்சாட்டு வைத்ததால் அவர்களுக்கு 10% வாக்குகள் உயர்ந்திருக்கிறது என்று அந்த பகுதிகளிலுள்ள பத்திரிக்கைகள் சொல்கின்றனர். மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் மக்கள் பிரச்சனையைப் பேசி இந்தியா கூட்டணி முன்னேறி வருகிறது. எனவே ஆளும் ஒன்றிய அரசுக்கு இந்த தேர்தல்கள் நெருக்கடியாகத்தான் அமையும் என்றார்.