சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை, இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரின் தாயாருக்கு கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு மாத காலமாக புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஸ்வரனும் அவருடன் வந்த ஒரு நபரும் புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மருத்துவர் பாலாஜி அந்த நபர்களிடம் அலட்சியமாக பதில் அளித்ததால் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரை குத்தியதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் மேலும் இது குறித்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனைக்குள் புகுந்து, மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்திலேயே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கிண்டி அரசு மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெற்று வந்த மருத்துவரிடம் நலம் விசாரித்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தினமும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சட்ட ஒழுங்கு சீர் கெட்டு கிடக்கும் நிலைமை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது. ஒரு உயிரை பாதுகாக்கின்ற புனிதமான தொழிலை பார்க்கும் மருத்துவர்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றவர்களின் உயிரை காக்கும் சேவை செய்யும் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. ஒரு உயிரை காக்கின்ற மருத்துவருக்கே, பாதுகாப்பு இல்லாத சூழல் இன்றைக்கு தமிழ்நாட்டில் நிலவுகிறது. மருத்துவமனையில் ஒருவர் ஆயுத்த்தோடு வந்துள்ளார். இன்றைக்கு, வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் என எல்லோருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்று இருக்கிறது.
அடிப்படை வசதி, சட்ட ஒழுங்கு என இரண்டு விஷயத்திலும் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது. மருத்துவமனைக்கு கலைஞர் பெயரை வைத்தால் மட்டும் போதுமா? பெயரை வைப்பது தான் முதல்வரின் வேலை. எங்கே போனாலும், கலைஞரின் பெயர் வைத்து, அங்கு ஒரு சிலை வைத்து அதில் மாலையை போடுகிறார். இன்றைக்கு முதல்வரின் அரசு, விதிகளின் படி முழுமையான பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், அதை தமிழக அரசு செய்யாது. எனவே, நம்மை நாமே பாதுகாக்க வேண்டிய நிலை தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள எல்லோருக்கும் இருக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.