தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கடந்த 25ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நெய்வேலியில் தமிழர் கூட்டமைப்பு சார்பில் காவிரி பிரச்சனைக்காக நடந்த போராட்டம் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேல்முருகன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இதனிடையே புழல் சிறையில் உண்ணாவிரம் இருந்த அவருக்கு சிறுநீரக பிரச்சனை, நீர் சத்து குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து இன்று அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார். இருப்பினும் அவர், தன் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளதாக கூறி மீண்டும் உண்ணாவிரம் இருக்க தயாராகி வருகிறார்.