சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி அருகே உள்ள மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவராகத் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் உள்ளனர்.
தமிழக அரசு சார்பில், கன்னியாகுமரியில் உள்ள அய்யன் திருவள்ளுர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் வெள்ளி விழா ஆண்டாகக் கொண்டாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக "தொன்மை பாதுகாப்பு மன்றம்" சார்பாக திருவள்ளுவர் சிலையை போற்றும் வகையில் "தொன்மை தமிழ் எழுத்துகளான மூன்றாம் நூற்றாண்டு தமிழி, ஐந்தாம் நூற்றாண்டு வட்டெழுத்து, கிரந்தம், ஒன்பதாம் நூற்றாண்டு சோழர் காலத்தமிழ் எழுத்துகளில்" தமிழாசிரியர் அன்பரசி , 9 ஆம் வகுப்பு மாணவர்கள் கே.நித்திஷ் கனிஷ்கா , நவீனா, தமயந்தி , ஒவியஸ்ரீ, அ.நித்திஷ் , ஏழாம் வகுப்பு தர்ஷனா , நவநீதன் ஆகியோர் 1330 திருக்குறளையும் திருவள்ளுவர் சிலை உருவத்தில் தமிழி , வட்டெழுத்திலும் வரைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, குறளோவியம் தந்த கலைஞரை போற்றும் வகையில் கிரந்த எழுத்திலும் , தஞ்சை பெரிய கோவிலை போற்றும் வகையில் சோழர் காலத் தமிழ் எழுத்திலும் உருவங்கள் வரைந்து 1330 திருக்குறளையும் தனித்தனியாக இரண்டு நாட்களில் 20 மணி நேரத்தில் 1330 வீதம் 4 சார்ட்களில் மொத்தம் 5320 திருக்குறளை எழுதியுள்ளனர்.
அதே போல், பத்தாம் வகுப்பு மாணவன் பிரதீப், திருவள்ளுர் சிலையை நின்ற நிலையில் சாக்பீஸ்லும் , சோப்பில் அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் சிலையையும் நுண்கலை சிற்பமாக செதுக்கி உள்ளார். இது குறித்து, ஆசிரியர் அன்பரசி கூறுகையில், மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்குப் பள்ளிகளில் கல்விசார் இணை செயல்பாடுகள் மூலம் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் இப்பள்ளியின் சார்பாக எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.