Skip to main content

அதிபரைத் தொடர்ந்து இடைக்கால அதிபர் பதவி நீக்கம்!; தென் கொரியாவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்

Published on 28/12/2024 | Edited on 28/12/2024
Dismissal of Interim Chancellor followed by Chancellor in South Korea!

தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல் கடந்த 3ஆம் தேதி இரவு அந்நாட்டில் திடீரென அவசரநிலை ராணுவச் சட்டத்தை அறிவித்தார். நாட்டின் நிர்வாகத்தை எதிர்க்கட்சிகள் குறுக்கீடு செய்வதாகவும், வடகொரியாவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், எதிர்நிலை செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டி அந்நாட்டு அதிபர், அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். தென் கொரியா அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், இந்த அவசரநிலை ராணுவச் சட்டத்தை திரும்ப பெறுவதாக அந்நாட்டு அதிபர் யூன் சுக் யீயோல் அறிவித்தார். இதனால், அங்கு இயல்பு நிலை திரும்பியது. திடீரென்று, ராணுவநிலை அவரச சட்டம் அமல்படுத்தியதற்கு தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத்தினர். அதனை தொடர்ந்து, , தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தில் ஆளுங்கட்சி உள்பட 204 உறுப்பினர்கள், அதிபரின் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால், பெரும்பான்மை கிடைத்த பட்சத்தில் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இதன் மூலம் யூன் சுக் யீயோல், பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, கடந்த 14ஆம் தேதி  அந்நாட்டின் இடைக்கால அதிபராக, பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், திடீர் அவசரநிலை பிரகடனத்தில் ஹான் டக்-சூவுக்கும் முக்கிய பங்கு இருப்பதாகக் கூறி அந்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் தென்கொரியா நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தனர். 300 உறுப்பினர்கள் கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில், 192 பேர் இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன்படி, இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, தென் கொரியாவின் இடைக்கால அதிபராக, துணை பிரதமரும், நிதியமைச்சருமான சோய் சாங்-மோக் நியமிக்கப்ப்ட்டுள்ளார். தென் கொரியா நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளால் அந்நாட்டு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்