சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை நேற்று (25.12.2024) இரவு போலீசார் கைது செய்தனர். ஞானசேகரன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு, வழிபறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தகைய சூழலில் தான அதிமுக சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன்பு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இன்று (26.12.2024) போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், பா. வளர்மதி, அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இந்நிலையில் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “போராட்டத்தை முடித்துவிட்டு கைது செய்யப்பட்ட நிலையில் வாகனத்தில் ஏறுகிறோம். அப்போது அங்கு 4, 5 பேருந்துகள் தான் இருந்தது. 25 ஆயிரம் பேருக்கு நான்கு, ஐந்து பேருந்துகளில் எவ்வாறு ஏற முடியும்.
நானும் அதிமுக மாவட்டச் செயலாளருடன் ஏறிய வாகனத்தில் 350 பேர் இருந்தோம். ஒரு பேருந்தில் 350 பேர் போக முடியுமா?. 350 பேரை உள்ளே தள்ளி நான் வேறு வழி இல்லாமல் படியில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கீழே விழுந்து தோள்பட்டை உடையும் சூழ்நிலை ஆகிவிட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் வந்து பரிசோதித்தனர். முழுக்க முழுக்க நிர்வாக சீர்கேடான நிர்வாகத் திறன் அற்ற மாநில அரசுதான் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதற்கெல்லாம் கண்டிப்பாக 2026இல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி ஏற்படும். அப்போது அதற்கெல்லாம் தீர்வு. இன்றைக்கு நடந்த ஆர்ப்பாட்டம் என்பது அமைதியான முறையில் எங்களுடைய முழக்கங்களைத் தெரிவித்து விட்டோம். ஆனால் காவல்துறை உரிய முறையான ஏற்பாடு செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களுக்கு எதிராகச் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக ஆட்சியைக் கண்டித்து, அதிமுக சார்பில் நாளை (27.12.2024 - வெள்ளிக் கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும்; மக்கள் அதிகம் கூடும் அதிமுக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.