சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், அந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரனை நேற்று (25.12.2024) இரவு போலீசார் கைது செய்தனர். ஞானசேகரன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு, வழிபறி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் தமிழக பா.ஜ.க. தலைவர் இன்று (26.12.2024) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நாளையில் இருந்து பா.ஜ.கவினர், அவர்களது வீட்டின் முன்பு 10 மணியளவில் நின்று ஆர்ப்பாட்டம் செய்வார்கள். நாளை காலை 10 மணியளவில் நான் என்னை 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்ளக் கூடிய நிகழ்வை என்னுடைய வீட்டிற்கு வெளியே நிகழ்த்தப் போகிறேன். நாளையில் இருந்து தி.மு.க. என்கிற கட்சி தமிழகத்தில் இருந்து அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி மாதம் 2வது வாரம் இந்த விரதம் முடியும். அதனைத் தொடர்ந்து முருகனின் ஆறுபடை வீட்டுக்குச் சென்று முருகப்பெருமானிடம் முறையிடப் போகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வி.சி.க. நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “லண்டன் போய்விட்டு வந்த பிறகு அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஏன் அவர் இப்படிப்பட்ட முடிவை எடுக்கிறார் என்று வருத்தம் அளிக்கிறது. தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் அகிம்ஷாவளி போராட்டத்தைக் காந்தியடிகளைப் போலக் கையில் எடுக்கிறார். காந்தியடிகள் கூட இப்படிப்பட்ட போராட்டத்தை அறிவித்ததில்லை.
உண்ணாநிலை அறப்போராட்டம் சரி. தன்னை தானே சவுக்கால், சாட்டையால் அடித்து அடித்துக் கொள்வது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருடைய போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியதாக மாறிவிடக்கூடாது” எனப் பேசினார். மேலும் தொடர்ந்து பேசுகையில், “எப்.ஐ.ஆர். இல் இருந்த மாணவியின் விவரங்கள் வெளியாகி இருக்கக் கூடாது. அவ்வாறு வெளியாகியுள்ளது ஏற்புடையது அல்ல. எனவே இத்தகைய செயல் கண்டனத்திற்குரியது. அதற்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.