Published on 02/09/2019 | Edited on 02/09/2019
நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் வெளியேறினர். இதில் முக்கியமாக தேனி தொகுதியில் தினகரன் கட்சி சார்பாக போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவை விட்டு விலகி திமுகவில் இணைந்தார். சில நாட்களுக்கு முன்பு தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கட்சியினரின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று டிடிவி தினகரன் திருச்சி வந்தார். அங்கு கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பிறகு திருநெல்வேலி சென்றார். அங்கு பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதற்காக சென்றார்.
அப்போது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம், முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டு பயணத்தை பற்றி கேட்டனர். அதற்கு, முதலீடுகளைக் கொண்டுவருவதாக கூறி முதல்வர் சென்றுள்ளார். அதைப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை அப்படி கொண்டுவந்தால் மகிழ்ச்சி தான் என்று கூறினார். ஆனால் தற்போது நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவும் போது முதலீட்டாளர்கள் எப்படி இங்கு தொழில் தொடங்க வருவார்கள் என்று தெரியவில்லை' எனக் கூறினார். அடுத்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவில் பதவி கொடுக்கப்பட்டது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு, அமமுகவில் இருந்தபோது திமுகவைக் கொள்கையே இல்லாத கட்சி என விமர்சனம் செய்தவர். அங்கேயாவது 11 மணிக்கு மேல் போன் பண்ணி திமுக தலைவர்களைப் பற்றி குறை சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அறிவுரை கூறுவது போல் தெரிவித்தார்.