Skip to main content

'தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதை ஏற்க முடியாது' - அன்புமணி கண்டனம்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

'It is unacceptable for the corporation to step aside after handing it over to the private sector'-Anbumani condemned

 

காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு சென்னை மாநகராட்சி ஒதுங்கிக் கொள்வதை ஏற்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான  358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும்  காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலன் சார்ந்த இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதற்கு மாறாக, தனியாரிடம் ஒப்படைத்து விட்டு மாநகராட்சி ஒதுங்கிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநகராட்சியின் முடிவு கண்டிக்கத்தக்கது.

 

மாநகராட்சியின் 358 பள்ளிகளில் பயிலும் 65,000 மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை மாநகராட்சி மூலமாக செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. அவ்வாறு செயல்படுத்துவதற்கு மாறாக இந்தத் திட்டத்தை தனியாரிடம் வழங்கி அதற்கு ரூ.19 கோடியை தாரைவார்ப்பது நியாயமல்ல. இதனால் பள்ளி மாணவர்களை விட தனியாரே நலம் பெறுவார்கள். தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து, அதற்கான சோதனை முயற்சியாக சென்னையில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

 

சென்னை மாநகரைப் பொறுத்தவரை கடந்த ஆட்சியிலேயே காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அட்சய பாத்திரம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு மாநகராட்சியோ, அரசோ அந்த நிறுவனத்திற்கு நேரடியாக எந்த நிதியும் வழங்கவில்லை. அதேநேரத்தில் ஆளுநர் மாளிகை மூலமாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன் காரணமாகத் தான் காலை உணவுத் திட்டத்தை அரசே நடத்தும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், இப்போது அதே திட்டத்தை ரூ.19 கோடியை தனியாருக்கு கொடுத்து செயல்படுத்தச் சொல்வதான் நோக்கம் என்ன? அதிமுக அரசின் செயலுக்கும், திமுக அரசின் செயலுக்கும் என்ன வித்தியாசம்?

 

இவை அனைத்தையும் கடந்து, தனியாருக்கு வழங்கப்படவுள்ள நிதியைக் கொண்டு இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதில் என்ன சிக்கல்? தனியாரால் நடத்தப்பட வேண்டிய மது வணிகத்தை தமிழக அரசு விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசே செய்ய வேண்டிய கல்வி சேவையையும் உணவு விநியோகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கின்றன. இதுவா மக்கள் நல அரசுக்கு அடையாளம்?

 

மாணவர்களின் நலன் சார்ந்த காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்படக் கூடாது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் தீர்மானம் திரும்பப் பெறப்பட வேண்டும். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாநகராட்சி மூலமாகவே உணவு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.  

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கரும்புக்கான கொள்முதல் விலை போதுமானதல்ல'-ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
'Procurement price for sugarcane is not sufficient'-pmk Ramadoss

கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3150 போதுமானதல்ல: மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.5000 வழங்க முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியா முழுவதும் 2024-25ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில 10.25% சர்க்கரைத் திறன் கொண்ட கரும்புக்கு டன்னுக்கு 3,400 ரூபாயும், 9.50% அல்லது அதற்கும் குறைவான திறன் கொண்ட கரும்புக்கு  3150 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழக கரும்புகளுக்கு அதிகபட்ச சர்க்கரைத் திறன் 9.50% தான் இருக்கும் என்பதால், அவற்றுக்கு  ரூ.3150 மட்டும் தான் கிடைக்கும். கரும்புக்கு இந்த விலை போதுமானதல்ல.

தமிழகத்தில் விளைவிக்கப்படும் கரும்புகளுக்கு கடந்த ஆண்டில் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.2,919 வழங்கப்பட்டது. இப்போது ரூ.231 மட்டுமே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் 8% மட்டுமே உயர்வு ஆகும். இந்த கொள்முதல் விலையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கான உற்பத்திச் செலவு ரூ.3500-க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதை விட குறைவாக கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை.

எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து வழங்கும் முறையை ஐந்தாண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், பயிர்களின் உற்பத்திச் செலவை கணக்கிடுவதில் நிலத்திற்கான குத்தகைத் தொகை உள்ளிட்ட பல செலவுகள் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை.  மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருப்பதற்கு இதுதான் முக்கியக் காரணம் ஆகும். இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காகத்தான் நிலத்தின் குத்தகைத் தொகை உள்ளிட்ட செலவுகளையும் உற்பத்திச் செலவுடன் சேர்க்க வேண்டும்; அதை உறுதி செய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த உழவர்கள் தயாராகி வருகின்றனர். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் தான் கொள்முதல் விலை சிக்கலுக்கு தீர்வு ஏற்படும்.

தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு ரூ.3500 செலவாகிறது எனும் போது 50% லாபமாக ரூ.1750 சேர்த்து  டன்னுக்கு ரூ.5250 கொள்முதல் விலை வழங்க வேண்டும். குறைந்தது டன்னுக்கு ரூ.5000 ஆவது வழங்க வேண்டும். மத்திய அரசு அதன் கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.4000 அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அதன் பங்குக்கு சர்க்கரை ஆலைகள் மூலம் ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும் என்று அறிவித்து உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா?-அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
pmk

ஆசிரியர்கள் சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா?' என பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் இரு வகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படையில் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை அழைத்துப் பேசுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.

2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஜூன் 1-ஆம்  தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009க்கு பிறகு  நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.4100 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. ஒரே பணியை செய்யும் இருதரப்பு இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது.

ஊதிய முரண்பாடு 15 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், அதற்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 19 ஆம் தேதி முதல், பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் முதல் நாளான 19&ஆம் நாள் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை காவல்துறை  கைது செய்தது. தொடர்ந்து 20 ஆம் தேதியான நேற்று மீண்டும்  போராட்டம் நடத்திய போதும் அவர்களை காவல்துறை கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தது. நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கைது செய்து கொடுமைக்குள்ளாவதை நியாயப்படுத்தவே முடியாது.

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது; ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்பதை நான் மட்டும் வலியுறுத்தவில்லை. இன்றைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதே இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு திசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்திய போது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின்  ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இத்தகைய வாக்குறுதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது நியாயமற்றது.

இடைநிலை ஆசிரியர்கள் எப்போது போராட்டம் நடத்தினாலும், அதை ஒடுக்குவதே அரசின் கொள்கையாக உள்ளது. 202 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களின்  கோரிக்கையை ஏற்பது குறித்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைக்க 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்  என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 9 மாதங்களாகியும் அக்குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

அதனால், கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை அக்டோபர் 5 ஆம் நாள் காவல்துறை விரட்டியடித்தது; பலரை கைது செய்தது. அப்போதும் மூவர் குழுவின் அறிக்கை அடுத்த 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என்று அரசு மீண்டும் வாக்குறுதி அளித்தது. ஆனால், அதன்பின் 5 மாதங்களாகியும் மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் தான் இடைநிலை ஆசிரியர்கள் இப்போது மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஒரே பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு இருவகையான ஊதியம் வழங்குவது பெரும் அநீதியாகும்.  தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது அதைவிடக் கொடுமையாக அநீதியாகும். இதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு, இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச வேண்டும்; சமவேலைக்கு சம ஊதியம் என்ற அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.