
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர் கீரமங்கலத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் "ஆச்சி பானிப்பூரி" பாக்கெட் வாங்கிச் சென்றுள்ளார். பாக்கெட்டில் காலாவதி காலம் இன்னும் சில மாதங்கள் உள்ளது.
பானிப்பூரி பாக்கெட்டை வீட்டிற்கு வாங்கிச் சென்றவர் அதை எண்ணெயில் பொரிக்க பாக்கெட்டை பிரித்த போது குடும்பமே அதிர்ந்து போய்விட்டனர். பானிபூரி உளுத்து மாவாக கொட்டி அந்த மாவில் சின்னச்சின்ன பூச்சிகள் ஊர்ந்துள்ளதைப் பார்த்துள்ளனர். உடனே அந்தப் பாக்கெட்டை வாங்கிய கடைக்கே கொண்டு போனால் டீலரிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளனர். டீலரோ நாங்க என்ன செய்றது காலாவதி தேதி இருக்கும் போது ஒன்று இரண்டு பாக்கெட்ல ஏதாவது குறை இருக்கும் என்று கூறியுள்ளனர்.
இதனால் மனஉளைச்சலாகிய கார்த்தி இதே போல எவ்வளவோ பூச்சிகள் உள்ள உணவுப் பொருளை பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். ஆகவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றவர், இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதால் சம்மந்தப்பட்ட ஆச்சி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு வழக்கு போடவும் தயாராக உள்ளேன் என்றார்.
பல மாதங்களுக்கு முன்பு தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்படும் ரெடிமேட் உணவுகளால் பாதிப்பு என்று மருத்துவர்களும் ஆய்வாளர்களும் எவ்வளவோ சொல்லியும் கூட இளைய தலைமுறை நேரத்தை மிச்சம் செய்வதாக நினைத்து ரெடிமேட் உணவுகளையே விரும்பி வருகின்றனர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.