7 தமிழர் விடுதலையை ஆளுனர் தாமதித்தால் அதை விட கொடுமையான மனித உரிமை மீறல் எதுவும் இருக்க முடியாது. அதை தமிழ்நாடும் ஏற்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்யும் விஷயத்தில் தமிழக ஆளுனரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்; இந்த விஷயத்தில் மத்திய அரசிடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது அனைவரும் அறிந்த உண்மை தான் என்றாலும் கூட, 7 தமிழர் விடுதலையை விரைவுபடுத்த உதவும் என்ற அளவில் வரவேற்கத்தக்கதாகும்.
7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித்துக்கு ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தான் 7 தமிழர் விடுதலை குறித்து தமிழக ஆளுனர் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. . மத்திய அரசின் இந்த புதிய நிலைப்பாடு 7 தமிழர்கள் விடுதலை குறித்த விவகாரத்தில் இரு வகைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
உயர்நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்துள்ள இந்த வழக்கு கடந்த ஜனவரி 8-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் முன்னிலையாகி, 7 தமிழர்களை விடுதலை செய்யக்கூடாது என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு என்று வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில், 7 தமிழர் விடுதலைக்கு எதிராக கருத்து தெரிவித்தது தவறு என்று கண்டனம் தெரிவித்திருந்தேன். இப்போது மத்திய அரசு அதன் முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுனர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று கூறியிருப்பதே இந்த விவகாரத்தில் கிடைத்திருக்கும் பெரும் வெற்றியாகும்.
7 தமிழர் விடுதலை குறித்து தங்களிடம் தமிழக ஆளுனர் ஆலோசனை நடத்தத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறிவிட்ட நிலையில், இதுபற்றி முடிவெடுப்பதை ஆளுனர் மாளிகை இன்னும் அதிக காலத்திற்கு தாமதிக்க முடியாது. இது இந்த விஷயத்தில் இரண்டாவது வெற்றியாகும்.
பேரறிவாளன், நளினி. முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும்படி ஆளுனருக்கு பரிந்துரைக்கும் தீர்மானத்தை 09.09.2018 அன்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியது. அதன்பின் 516 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை அதன்மீது முடிவெடுக்காமல் இருப்பதை ஆளுனர் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தத் தேவையில்லை என்று ஆளுனர் மாளிகையே கடந்த 2018-ஆம் ஆண்டு கூறிவிட்ட நிலையில், இவ்விஷயத்தில் ஆளுனர் இன்னும் முடிவெடுக்காதது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
7 தமிழர்களை விடுதலை செய்ய சட்டப்படியோ, அரசியல் ரீதியாகவோ எந்த தடையும் இல்லை. அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு; அதில் வேறு யாரும் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதேபோல், 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராஜிவ் காந்தியின் துணைவியார் சோனியா காந்தி அவர்களும், புதல்வர் ராகுல் காந்தி அவர்களும் பல்வேறு கால கட்டங்களில் கூறியுள்ளனர். 7 தமிழர்களையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், கேரள முன்னாள் சட்ட அமைச்சருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தினார்.
இவ்வளவுக்குப் பிறகும் இதுதொடர்பான விஷயங்களில் முடிவெடுக்க காலநிர்ணயம் செய்யப்படவில்லை என்ற ஒற்றைக் காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு 7 தமிழர் விடுதலையை ஆளுனர் தாமதித்தால் அதை விட கொடுமையான மனித உரிமை மீறல் எதுவும் இருக்க முடியாது. அதை தமிழ்நாடும் ஏற்காது.
ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் விரும்பும் சூழலில், அதை அமைச்சரவையும் பரிந்துரைத்துள்ள நிலையில், அதை நிறைவேற்றுவது தான் ஆளுனரின் கடமை ஆகும். எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான ஆணையை ஆளுனர் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.