Skip to main content

“பட்டியலின மக்களுக்காகப் பாடுபடும் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர்” - திருமாவளவன்

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
 Thirumavalavan speech at amstrong funeral

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன் தினம்(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல், பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகல், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் வருகையையொட்டி பெரம்பூர், செம்பியம் பகுதியில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசினார். அப்போது அவர், “ஆம்ஸ்ட்ராங் கொலை என்பது கோழைத்தனமான படுகொலை. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தேசிய தலைவர்களும் இந்த கொலையை கண்டித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஒட்டுமொத்த தலித் அரசியலுக்கு ஏற்பட்ட பேரிழப்பு. பெளத்தம் தான் நமக்கான மாற்று அரசியல் என்பதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் வலியுறுத்தி வந்தார். எந்த பதவி ஆசையும் இல்லாமல் அம்பேத்கரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங்கை இழந்தது பட்டியலின மக்களுக்கான அரசியலுக்கு நேர்ந்த பேரிழப்பு. 

ஆம்ஸ்ட்ராங் மிகவும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மிகக் கொடூரமான கொலை சென்னையில் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் படுகொலைகள் தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது. ஆம்ஸ்ராங்க் கொலையை அரங்கேற்றிய கூலிப்படைகளை யாரென்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கைப் படுகொலை செய்திருக்கிறார்கள். உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின மக்களுக்காகப் பாடுபடும் அரசியல் தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். பட்டியலின மக்களுக்கான தலைவர்களுக்குப் பாதுகாப்பைத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். அவருடன் இயக்குநர் பா.ரஞ்சித் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

சார்ந்த செய்திகள்