
2025 - 26 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று (04.05.2025) நடைபெற்று முடிந்துள்ளது. நேற்று நடந்த நீட் தேர்வின் போது, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி அணிந்திருந்த ஆடையில் இருந்த பட்டன் நீக்கப்பட்ட சம்பவம், மாணவி ஒருவருக்கு வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரம், பெண்கள் அணிந்திருந்த தாலி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றிய விவகாரம், தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் என பல்வேறு சம்பவங்கள் நடந்து நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வு கடுமையான விமர்சனத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வைத்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “மாநில தன்னாட்சி மாநில சுயாட்சி நாயகர்கள் என்று விழா எடுத்து பாராட்டிக் கொள்கிறவர்கள் வெட்கப்பட வேண்டும். இந்த நீட் என்கிற தேர்வு முறையில் பல கேள்விகளை நாங்கள் எழுப்புகிறோம். அதற்கு யாரிடத்திலும் பதில் இல்லை. இந்த நீட் எனும் தேர்வு முறைதான் தரமான மருத்துவரை உருவாக்கும் என்பதை எப்படி உறுதி தருகிறீர்கள்?. நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி என்கிற பேரில் நிறுவனங்களின் முதலாளிகள் பல ஆயிரம் கோடியை சம்பாதிக்கிறார்கள். இது தான் இந்த நீட் தேர்வு கொடுக்கிறதே தவிர தரமான மருத்துவரை உருவாக்கவில்லை.
இந்த நீட் தேர்வை நடத்துகிற நிறுவனம் எது? இந்த நாடு நடத்துதா? அமெரிக்காவில் இருக்கிற ப்ரோமெட்ரிக் என்கிற ஒரு தனியார் நிறுவனம் நடத்துகிறது. அமெரிக்காவில் இருக்கும் தனியார் நிறுவனம் தான் உன் நாட்டின் தரமான மருத்துவ மாணவர்களை தேர்வு செய்து தருவான் என்கிற நிலைமை எவ்வளவு அவமானகரமானது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். ஒரு மாணவனை தேர்வு செய்யும் தேர்வையே நடத்த முடியாது நீங்கள், ஒரு நாட்டின் தலைவனை தேர்வு செய்ய தேர்தல் எப்படி சரியாக நடத்துவீர்கள்?. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று வந்து பிறகு, எனக்கு பாடம் நடத்தக்கூடிய பேராசிரியர் பெருந்தகைகள் யார்? மருத்துவ பேராசிரியர்கள் யார்? பழைய மருத்துவர்கள் தான். அந்த பாடத்திட்டம் என்ன? பழையப் பாடத்திட்டம் முறைதான். இந்த நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்த போது இதே திமுக அரசு எப்படி ஆதரித்தது? நீட் தேர்வுக்கு எதிராக 60 லட்சத்துக்கு மேல கையெழுத்து வாங்கினீர்கள்?. அதை என்ன செய்தீர்கள்?.
இந்தியா முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த கொடுமை நடக்கிறது இந்த மூக்குத்திக்குள் பிட்டை கொண்டு போய் பார்த்து எழுதிட முடியும் என்று நம்புகிறார்களா?. உள்ளாடைகளைக் கழற்றச் சொல்கிறார்கள், தாலியைக் கழற்றச் சொல்கிறார்கள். இது ஜனநாயக நாடா?. இந்த நாட்டில் மட்டும் நான் விரும்பிய கல்வியை கற்பதில் ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது? உலகத்தில் எந்த நாட்டிலும் கல்வி சுகமாக இல்லாமல் சுமையாக இருக்கிறது?.
வட இந்தியாவில் நீட் தேர்வு எழுதும்போது புத்தகத்தை விரித்து வைத்து எழுதுகிறான். அதை, மேற்பார்வையாளர் கதவு அருகில் நின்று கொண்டு யாராவது வருகிறார்களா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்தனை மாநிலங்கள் நடக்கும் போது என் மாநிலத்தில் மட்டும் ஏன் இந்த கொடுமை நடக்கிறது?. என் பிள்ளைகள் அனைவரும் கண்ணீரோடு உள்ள தேர்வு எழுதுகிறார்கள். இது மாதிரி ஒரு மனிதவதை கொடுமை ஏதாவது உண்டா? இந்த மூக்குத்திக்குள்ளே எப்படி பிட்டு கொண்டு போக முடியும்? தாலியில் எப்படி பிட்டு கொண்டு போக முடியும்?. காவல்துறைக்கு அங்கே என்ன வேலை?. இத்தனை மாநிலங்கள் எழுதும்போது என் மாநிலத்தில் மட்டும் இந்த துயரம் தொடருகிறது” என ஆவேசமாகப் பேசினார்.