
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் மாநாடு இன்று (05-05-25) நடைபெற்றது. இந்த மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “திமுக எப்போதும் வணிகர்களுக்கு எதிரான கட்சி. திமுகவுக்கு சாதகமாக உள்ள ஒரு சில வணிகர்களை பயன்படுத்தி வணிகர்களிடையே பிளவு உண்டாக்குவதற்கு திமுகவுக்கு கைவந்த கலையாகும். நாட்டின் பொருளாதாரத்திற்கான முதுகெலும்பு வணிகர்கள், உற்பத்தியாளருக்கும் வாங்குவோருக்கும் இடையே அச்சாணியாக திகழ்வது நமது வணிகர்களே. அவர்கள் நலனை பாதுகாப்பதில் அதிமுக எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். சிறிய தேநீர் விடுதி, அடகு கடைகள் சிற்றுண்டி சாலைகள் போன்ற வியாபாரங்கள் தொழில் செய்பவர்களுக்கு முழு அளவில் காவல் மற்றும் சட்ட பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று இங்கே வியாபாரிகள் தெரிவித்தார்கள். அதை எங்களுடைய ஆட்சியில் முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. மீண்டும் ஆட்சி மலர்ந்த பிறகு இந்த கோரிக்கைக்கு நிச்சயமாக அதிமுக செவிசாய்க்கும். நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் பாதிக்கப்படும் சுதேசி வணிக நிறுவனங்களுக்கு முழு அளவில் வரிவிளக்கு அளித்து அந்த நிறுவனங்களை அரசு காத்திட வேண்டும். நேர்மையாக வரிகட்டும் வணிக நிறுவனங்களையும், வணிகர்களையும் அதிமுக பதவி ஏற்கும் போது அரசின் சார்பில் கௌரவிக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றேன்.
வணிகர்கள் லாரியில் சரக்கினை கொண்டு செல்லும்போது அதிகாரிகள் நடத்தப்படும் சோதனையின் போது ஏதேனும் குறைபாடு இருப்பின் லாரில் உள்ள மொத்த பொருட்களுக்கு ஈடாகவோ அல்லது பொருளில் மதிப்பில் இருமடங்கோ அபராதம் விதிக்கின்றனர் என்று வியாபாரிகள் என்னிடத்தில் தெரிவித்தனர். இது தவிர்க்கப்பட வேண்டும். உண்மையிலேயே தவறு நடந்திருந்தால் விடுபட்ட பொருள்களுக்கு அபராதத்தை விதித்தால் சரியாக இருக்கும், அதுதான் முறை. வணிகவரி அதிகாரிகள் ஏதேனும் ஒரு கடைக்கு சென்று டெஸ்ட் பர்சேஸ் என்று சொல்லி அந்த கடைக்காரர்களுக்கு அதிகமான அபராதம் விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதை நான் சட்டமன்றத்தில் நான் பேசினேன். இப்போது, அது குறைக்கப்பட்டிருப்பதாக என்னுடைய கவனத்திற்கு வந்திருக்கிறது. நாட்டு மக்களின் இரு கண்களாக திகழ்பவர்கள் வேளாண் பெருமக்களும், வணிக பெருங்குடி மக்களும் தான்.
வேளாண் பெருமக்கள், மக்களின் வயிற்றில் பசியை போக்கும் உணவு பொருட்களை உருவாக்குகிறார்கள், வணிகர்கள், அவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். இரு தருப்பினருக்கும் நாம் நன்றி கூற கடமை பெற்றுக்கிறோம். அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் என அனைத்து உணவு பொருட்களின் விலையும் விண்ணை முற்றும் அளவுக்கு இந்த ஆட்சியில் உயர்ந்துள்ளது. கட்டுப்படுத்திய தவறிய அரசாங்கம் திமுக அரசாங்கம். விலை ஒரு பக்கம் ஏறினால் அதை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. ஆனால் வியாபாரி மீது இந்த அரசு பழியை சுமத்துகின்றது. இது கையாலாகாத ஆட்சியின் இரட்டை வேடத்தை வணிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும், மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வணிக பெருமக்களுக்கு உறுதியாக இதய சக்தியோடு செயல்பட்டு வருவது அதிமுக தான். மக்கள் விரோத இந்த ஸ்டாலின் மாடல் அரசு விரைவில் அகற்றப்பட வேண்டும். வணிக பெருமக்களும் எங்களுக்கு முழு அளவில் ஆதரிக்க வேண்டும் என்று இந்நாளில் வணிக பெருமக்களுக்கு வேண்டுகோளாக வைக்கின்றேன்” எனப் பேசினார்.