Skip to main content

இதற்கு பதில் சொல்லிவிட்டு பிறகு வாய்ச்சவடால் அடிக்கலாம்... ராமதாஸ்க்கு பொன்.குமார் அடுக்கடுக்கான கேள்வி

Published on 03/04/2019 | Edited on 03/04/2019



நீங்கள் இதுவரை வன்னியர்களுக்காக செய்தது என்ன? அறக்கட்டளை கல்லூரிக்கு ஏன் சரஸ்வதியின் பெயர் சூட்டப்பட்டது? 26 தியாகிகளின் ஒருவர் பெயரையாவது அந்தக் கல்லூரிக்கு வைத்திருக்கலாமே?. எத்தனை வன்னியர்களுக்கு பணம் பெறாமல் இலவசமாக கல்வி அளிக்கப்பட்டது? அன்புமணி ராமதாஸ் தனக்கான ஓதுக்கீட்டின் கீழ் எத்தனை வன்னியர் பிள்ளைகளுக்கு பணம் வாங்காமல் மருத்துவ கல்வி இடத்தை வழங்கியுள்ளார்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

     பாட்டாளி மக்கள் கட்சி குறித்து திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு முழுமையாக பதிலளிக்க முடியாத டாக்டர் இராமதாஸ், வன்னியர் அறக்கட்டளை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

ramadoss anbumani


 

அதில் வன்னியர் அறக்கட்டளையையும், தி.மு.க அறக்கட்டளையையும் ஓப்பிட்டு சில கேள்விகளைக் கேட்டுள்ளார். முதலில் இரண்டு அறக்கட்டளைக்கும் உள்ள வித்தியாசத்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க அறக்கட்டளை என்பது திராவிட முன்னேற்ற கழகத்தால் ஏற்படுத்தப்பட்ட ஓர் அறக்கட்டளையாகும். வன்னியர் அறக்கட்டளை என்பது பாட்டாளி மக்கள் கட்சியால் ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளையல்ல. இது தமிழகத்தில் உள்ள ஓட்டுமொத்த வன்னியர்களும் நிதி வழங்கி அதன் மூலம் ஏற்படுத்தப்பட்டது தான் இந்த அறக்கட்டளையும், அந்தக் கட்டளையின் பெயரில் உள்ள கல்வி நிறுவனங்களும், சொத்துக்களுமாகும். 
 

எனவே இது வன்னியர்களுக்கான ஒரு பொது அறக்கட்டளையாகும். இந்தக் கட்டளையின் பெயரில் உள்ள கல்லூரிக்கு எந்த அடிப்படையில் டாக்டர் இராமதாஸ் அவர்களின்  மனைவி சரஸ்வதியின் பெயர் சூட்டப்பட்டது. இடஓதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 26 தியாகிகளின் ஒருவர் பெயரையாவது அந்தக் கல்லூரிக்கு வைத்திருக்கலாமே?. அப்படி ஏன் செய்யவில்லை?. இந்த வன்னியர் அறக்கட்டளை பொதுவானது என்றால் அந்த அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் அறங்காவலர்கள் யார்? யார்? என்பதை வெளியிடட்டும். சரி வன்னியர்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற புனிதமான நோக்கத்துடன்  உருவாக்கப்பட்ட உன்னாத அமைப்பு என்று கூறும் டாக்டர் இராமதாஸ் அவர்கள், அந்த நிறுவனத்தின் மூலம் எத்தனை வன்னியர்களுக்கு பணம் பெறாமல் இலவசமாக கல்வி அளிக்கப்பட்டது என்ற பட்டியிலை டாக்டர் இராமதாஸ் அவர்கள் வெளியிடத் தயாரா?. 
 

ramadoss anbumani - pon kumar


 

    ஐந்தாண்டு காலம் மத்தியில் பசையுள்ள துறையான சுகாதாரத்துறைக்கு அமைச்சராக பொறுப்பிலிருந்த தங்களது அன்பு மகன் அன்புமணி இராமதாஸ் அவர்கள். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரியில் தனக்கான ஓதுக்கீட்டின் கீழ் எத்தனை வன்னியர் பிள்ளைகளுக்கு பணம் வாங்காமல் இலவசமாக மருத்துவ கல்வி இடத்தை வழங்கியுள்ளார் என்ற விவரத்தை வெளியிடத் தயாரா? தோல்வி பயத்தின் உச்சிக்கு சென்ற பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாஸ்சும், இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளரிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
 

   அன்புமணி இராமதாஸ் அவர்கள் பேசும்போது தி.மு.க என்பது பேரறிஞர் அண்ணா போன்றவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி என்றும், இந்தக் கட்சியை உருவாக்கிட பல பேர் உழைத்து தியாகம் செய்துள்ளனர் என்றும், அவர்கள் எல்லாம் இப்போது எங்கே? என்று கொஞ்சம் கூட நாணப்படாமல் கேட்டுள்ளார். 
 

வன்னியர் சங்கத்தையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் உருவாக்கியவர்கள் யார்?. அதனை வளர்த்தெடுக்க தியாகம் செய்தவர்கள் யார்? யார்?. பேராசிரியர் தீரன் எங்கே? பு.தா.இளங்கோவன். சி.என்இராமமூர்த்தி போன்ற இந்த இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்த ஆயிரக்கணக்கானவர்கள் இப்போது எங்கே? வன்னியர்கள் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தொடங்கிய போது அதற்கு சம்மந்தேமே இல்லாத அன்புமணி இராமதாஸ் கையில் பாட்டாளி மக்கள் கட்சியை வைத்து கொண்டு தி.மு,கவை நோக்கி இந்த கேள்வியை கேட்பதற்கு அவர் கொஞ்சம் கூட வெட்கப்பட்டதாக தெரியவில்லை. 
 

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க,ஸ்டாலின், வன்னியர்களுக்காகப் பாடுபடுவதாக கூறி கொள்ளும் நீங்கள் இது வரை வன்னியர்களுக்காக செய்தது என்ன என்பதை கூற முடியுமா?. என பல மேடைகளில் கேட்டுள்ளாரே முதலில் அதற்கு பதில் அளிக்கட்டும். பிறகு வாய்ச்சவடால் அடிக்கலாம்.
 

    தனது அறிக்கையின் இறுதியில் தி.மு.கவில் உள்ள வன்னியர்களானாலும், பொதுவான வன்னியர்களானாலும் அவர்கள் சிங்கத்தைத் தான் மதிப்பார்கள். சிறு நரிகளின் கதறுதல்களைக் கண்டு கொள்ளப்பட்டார்கள் என்று கூறியுள்ளார். ஆம். உண்மைதான். திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை; கார் உள்ள வரை, கடல் நீர் உள்ள வரை, பார் உள்ள வரை எந்தக் கட்சிகளுடன் கூட்டணில்லை; இதை பத்திரத்தில் வேண்டுமானாலும் எழுதித் தருகிறேன்; அ.தி.மு.கவோடு கூட்டணி வைத்தால் அது பெற்றத் தாயையே புணர்வதற்கு சமம்; இனி பாட்டாளி மக்கள் கட்சி எல்லாத் தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடும்; பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என சிங்கமாக கர்ச்சித்தவர்கள் இப்போது அந்தர் பல்டி அடித்து  அ.தி.மு.கவோடு கூட்டணி ஏற்படுத்தி சிறு நரிகளாக ஆகிவிட்டீர்கள். எனவே சிறு நரிகளின் கதறுதல்களுக்கு ஒட்டு மொத்த வன்னியர்களும் கண்டு கொள்ள மாட்டார்கள் தான். அதை ஏப்ரல் 18ம் தேதி நிருபிப்பார்கள். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 


 
 

சார்ந்த செய்திகள்