
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பூக்கொல்லை கடைவீதியில், சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று (16-02-25) இரவு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “1972 ல் எம்.ஜி.ஆர் பிரிந்து சென்ற போது அவரது பரங்கிமலைத் தொகுதியிலே அழைத்துச் சென்று சிறப்பான வரவேற்பு கொடுத்து மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தோம். ஆனால், எம்.ஜிஆர் பிரிந்த பிறகு 1972 ல் இந்த பேராவூரணி தொகுதிக்கு கலைஞர் வந்த போது என்ன நிலைமை ஏற்பட்டது தெரியுமா? என்னைப் போன்ற 80 வயதைக் கடந்தவர்களுக்கு தெரியும். தான் பிறந்த தஞ்சை மண்ணில் இப்படி ஒரு நிலைமை என்று மன வருத்தத்தோடு சென்றார்.
தமிழ்நாட்டில் 184 தொகுதிகளில் வெற்றி பெற்ற போது இந்த தொகுதியில் (பேராவூரணி) வெற்றி பெறவில்லை. அப்போது தி.மு.க.வில் சீட் கொடுக்காததால் குழ.செல்லையா சுயேட்சையாக போட்டியிட்டு திமுகவை தோற்கடித்தார். அப்போது கலைஞர் சொன்னார், ‘மண்டை இருக்கும் வரை சளி இருக்கும். பட்டுக்கோட்டை, பேராவூரணி இருக்கும் வரை கட்சியில குழப்பம் இருக்கும்’ என்பார் கலைஞர். அந்த நிலை இப்போது மாறி வெற்றி பெற்றிருக்கிறது. (இதற்கு குழ.செல்லையா மகன் அருள்நம்பி தி.மு.கவில் சேர்ந்ததும் ஒரு பிரதான காரணம். அப்பாவால் சீட்டை இழந்த தி.மு.க, மகனால் மீண்டும் கைப்பற்றியது என்றனர் கூட்டத்தில் இருந்த உடன்பிறப்புகள்)
மாஜி வைத்திலிங்கம் பற்றி பேசினார்கள். இனி அவர்களை அப்படி பேச வேண்டாம். நாளைக்கே நம்மிடம் வந்துவிடுவார்கள். வைத்தி அடிச்சதைவிட அவங்க தலைவி அடிச்சது தான கூட. தி.மு.கவுக்கு அதிக ஆதரவு உள்ளது. நமக்குள் உள்ள குழப்பங்களால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. நாம் ஒற்றுமையாக இருந்தால் எவன் தயவும் தேவையில்லை” என்று பேசினார்.