Skip to main content

வங்கிக்கடன் தவணைகள் மீதான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்! பா.ம.க. சிறப்புச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

Ramadoss

 

பா.ம.க. 32-ஆவது ஆண்டு விழா சிறப்புச் செயற்குழுக் கூட்டம் இணையவழி கலந்தாய்வு 16.07.2020 அன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் வங்கிக்கடன் தவணைகள் மீதான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும், இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை, கரோனா வைரஸ் பரவல் விரைவாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்; அரசின் முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

 

தீர்மானங்கள் விவரம்:  

 

தீர்மானம் 1 : கரோனா வைரஸ் பரவல் விரைவாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்; அரசின் முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்!

 

உலகிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா வைரஸ் நோய் தமிழ்நாட்டில் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று வரை 1,51,820 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,496 ஆகும். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உலகில் கரோனா பரவல் உள்ள 215 நாடுகளில் 207 நாடுகளில் ஏற்படும் பாதிப்புகளைவிட அதிகம் ஆகும். அதேபோல் சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,291 பேரும், ஒட்டுமொத்தமாக 80,961 பேரும் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

சென்னையில் கரோனா வைரஸ் நோய் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களில், குறிப்பாக தென் மாவட்டங்களில் கரோனா வைரஸ் நோய்ப் பரவல் மோசமாக உள்ளது. சென்னையில் கரோனா நோய்த் தொற்று வேகமாக அதிகரித்த போது, ஒவ்வொரு நாளும் செய்யப்படும் கரோனா சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தது, காய்ச்சல் முகாம்களை நடத்தியது, வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகளுடன் எவரேனும் உள்ளார்களா? என்பதை ஆய்வு செய்தது, முழு ஊரடங்கு பிறப்பித்து பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தடுத்தது, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாகத்தான் நோய்ப்பரவல் ஓரளவாவது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

 

அதேபோல், ஒவ்வொரு மாவட்டங்களிலும் கரோனா பரவல் எந்த அளவில் உள்ளது? அதற்கான காரணங்கள் என்ன? என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற வகையில் புதிய உத்திகளை வகுத்து அரசு செயல்படுத்த வேண்டும்; சென்னை தவிர்த்த மற்ற அனைத்து மாவட்டங்களிலும் செய்யப்படும் தினசரி சோதனைகளின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும்; ஒவ்வொரு ஊரிலும் காய்ச்சல் முகாம்களை நடத்தி கரோனா அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிய வேண்டும். இத்தகைய பணிகள் மூலம் மாவட்டங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். அத்துடன், வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு வாரம் ரூ.1,000 வீதம் நிதியுதவி வழங்க வேண்டும்; இதற்கு மத்திய அரசும் உதவ வேண்டும்.

 

அதே நேரத்தில், அரசு சிறப்பாகச் செயல்படுவதால் மட்டுமே கரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திவிட முடியாது என்பதை பொதுமக்கள் உணரவேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் மட்டுமே கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இதைக் கருத்தில் கொண்டு தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்த்தல், முகக்கவசம் மற்றும் கையுறை அணிதல் கட்டாயமாக்கிக் கொள்ளுதல், வெளியில் சென்று திரும்பியவுடன் சோப்பு நீரால் கழுவுதல் உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்கான  அரசின் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பா.ம.க. செயற்குழு கோருகிறது.

 

தீர்மானம் 2 : தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 17% தனி இடஒதுக்கீடு

 

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. எம். தணிகாச்சலம் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை வழங்க வேண்டும் என்பது ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பணிகளில் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமுதாயம் வன்னியர்கள் தான் என்று 1931ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர்,  அமைக்கப்பட்ட சட்டநாதன் ஆணையம், அம்பா சங்கர் ஆணையம் ஆகியவையும் இதை உறுதி செய்துள்ளன.

 

மருத்துவர் அய்யா தலைமையில் 9 ஆண்டுகள் தொடர் போராட்டம் நடத்திய போதிலும், வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயத்தினரை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு, அப்பிரிவுக்கு 20% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அப்பிரிவில் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. வன்னியர்களுக்கு உரிய சமூகநீதியும், இடஒதுக்கீடும் கிடைக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். வன்னியர்களின் மக்கள்தொகை மற்றும் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 17% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முறையான ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி, உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று பா.ம.க. செயற்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

 

தீர்மானம் 3 : இளம்பெண்கள் & குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை

 

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. வேலூரை அடுத்த பாகாயத்தில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லையும், மிரட்டலும் விடுத்ததால் அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது, செய்யூர் அருகில் இளம்பெண் ஒருவர் தி.மு.க. நிர்வாகிகளால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டது,  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது வேதனையளிக்கின்றன; இவைக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

 

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக 01.01.2013-இல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தாலே பெருமளவில் குற்றங்களைத் தடுத்திருக்க முடியும். தமிழ்நாட்டில் தாரளமாக மது கிடைப்பதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு காரணம் ஆகும். இனி வரும் காலங்களிலாவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை, உடனடியாக பெற்றுத் தருவதன் மூலம் இத்ததைய குற்றங்களுக்கு முடிவு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் 4 : மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குதல்!

 

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் 15 விழுக்காட்டையும், முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களில் 50 விழுக்காட்டையும் மாநில அரசுகள், அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்குகின்றன. அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பட்டியல் இனத்தவருக்கு 15 விழுக்காடும், பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடும், பொதுப் பிரிவினருக்கான இடங்களில் உயர்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு மறுத்து வருவது, பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியாகும்.  

 

இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள் அநீதியானவை; நடைமுறை சாத்தியமற்றவை. பட்டியலினத்தவருக்கு ஒரு நீதி, உயர்சாதி ஏழைகளுக்கு ஒரு நீதி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இன்னொரு நீதி என மத்திய அரசு பாகுபாடு காட்டக்கூடாது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளைக் களையும் வகையில், மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்தவித நிபந்தனையுமின்றி  27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும் என பா.ம.க. கோருகிறது.

 

தீர்மானம் 5 : கிரிமிலேயரை கணக்கிட சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ளும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்!

 

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான கிரிமிலேயர் வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வல்லுநர் குழுவின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடந்த மார்ச் மாதம் எதிர்ப்புத் தெரிவித்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இப்போது மத்திய அரசின் முடிவுக்கான எதிர்ப்பை விலக்கிக்கொள்ள தீர்மானித்துள்ளது.

 

கிரிமிலேயரை கணக்கிடும் போது சம்பளத்தையும், விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்று 1993ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாறாக கிரிமிலேயரைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று வல்லுநர் குழு பரிந்துரைத்திருப்பதும், அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதும் நியாயமற்றவை. இந்த விசயத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பாதுகாவலனாக நின்று போராட வேண்டிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதற்கு மாறாக, மத்திய அரசின் சமூக அநீதிக்கு துணைபோவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கிரிமிலேயரைக் கணக்கிடுவதில் சம்பளத்தைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்பதில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உறுதியாக இருக்க வேண்டும். மத்திய அரசும், வல்லுநர் குழுவின் அபத்தமான பரிந்துரையை நிராகரித்துவிட்டு, கிரிமிலேயரை கணக்கிடுவதில் தற்போதுள்ள நிலையே தொடரும்; கிரிமிலேயர் வருமான வரம்பு ஆண்டுக்கு 12 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கவேண்டும் என இச்செயற்குழு கோருகிறது.

 

தீர்மானம் 6 : புதிய மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது: முழு மதுவிலக்கே உடனடித் தேவை!

 

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் எலைட் மதுக்கடைகளையும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் ஏற்கெனவே மூடப்பட்ட மதுக்கடைகளையும் திறப்பதற்கு அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட கொள்கை எனும் நிலையில், மதுக்கடைகளை மூடுவதற்கு பதிலாக புதிய மதுக்கடைகளைத் திறப்பது நியாயமற்றது. ஆகவே, புதிய மதுக்கடைகள் திறப்பு கைவிடப்பட வேண்டும்.

 

தமிழ்நாட்டில் கரோனா காலத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் ஆலோசனையை ஏற்று தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டன. மார்ச் 25ஆம் தேதி முதல் மே மாதம் 6ஆம் தேதி வரை   மதுக்கடைகள் மூடப்பட்டதால் தமிழக மக்கள் 43 நாட்கள் மிகவும் நிம்மதியாக இருந்தனர். ஆனால், தமிழகத்தில் கரோனா அச்சம் விலகுவதற்கு முன்பாகவே மே 7ஆம் தேதி சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் மதுக்கடைகளைத் தமிழக அரசு திறந்தது. மதுக்கடைகளில் மக்கள் நெரிசல் அதிகரித்த நிலையில், அதனால் கரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால் மதுக்கடைகளை மூட ஆணையிட வேண்டும் என்று கோரி பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் மதுக்கடைகளை  மூட சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று முறையீடு செய்து மே 16ஆம் தேதி முதல் மதுக்கடைகளைத் தமிழக அரசு மீண்டும் திறந்தது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவியதற்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டதும் முக்கியக் காரணம் என்பதில் ஐயமில்லை.


மதுக்கடைகள் மூடப்பட்டால் மட்டும் தான் தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும். எனவே, தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்கவேண்டும்; விரைவில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை பா.ம.க. கோருகிறது.

 

தீர்மானம் 7 : குறுவைப் பயிர்களைக் காக்க காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்க வேண்டும்!

 

தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் தான் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாற்று நடும் பணிகள் கூட இன்னும் முழுமையாக முடியாத நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கு குறுவை பாசனத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 72.50 அடியாகக் குறைந்துவிட்டது. அணையின் நீர் இருப்பு 34.85 டி.எம்.சி.-யாகக் குறைந்துவிட்டது. அணைக்கு விநாடிக்கு 196 கனஅடி மட்டுமே தண்ணீர் வரும் நிலையில், இருக்கும் நீரைக் கொண்டு ஒரு மாதத்திற்குக் கூட தண்ணீர் வழங்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

 

குறுவை சாகுபடிக்காக ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் 40.43 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆணையிட்டும் கூட, இன்றுவரை 9 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் 50 டி.எம்.சி.க்கும் கூடுதலாகத் தண்ணீர் இருக்கும் நிலையில், கர்நாடகத்திற்கு இப்போது தண்ணீர் தேவையில்லை என்ற சூழலில், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுப்பது கண்டிக்கத்தக்கது. கர்நாடக அணைகளில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்கப்படாவிட்டால், காவிரி பாசன மாவட்டங்களில் மூன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகிவிடும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்கும் வகையிலும், குறுவைப் பயிர்களைக் காக்கவும் தமிழ்நாட்டிற்கு உடனடியாகக் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் படி, கர்நாடக அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் 32ஆவது ஆண்டு விழா சிறப்புச் செயற்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் 8 : வங்கிக்கடன் தவணைகள் மீதான வட்டியைத் தள்ளுபடி செய்யவேண்டும்!

 

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமைப்பு சார்ந்த தொழில்துறை, அமைப்பு சாரா தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால், அவர்களின் பொருளாதார சுமையை ஓரளவு குறைக்கும் வகையில், பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து வகையான கடன் தவணைகளைச் செலுத்துவதை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து ரிசர்வ் வங்கி ஆணையிட்டது. இந்த 6 மாத அவகாசம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், பொருளாதாரச் சூழல் மேம்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அதைக் கருத்தில் கொண்டு கடன் தவணைகளைச் செலுத்துவதை மேலும் 3 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒத்திவைக்க வேண்டும்.

 

அதே நேரத்தில், கடன் தவணைகளை ஒத்திவைப்பது மட்டுமே தீர்வல்ல என்பதை ரிசர்வ் வங்கி உணரவேண்டும். ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டி செலுத்த வேண்டும் என்று கூறி வரும் வங்கிகள், வட்டித் தொகையையும் அசலுடன் சேர்த்து வருகின்றன. இது கடன்காரர்களை மீளமுடியாத கடன் புதை குழிக்குள் தள்ளிவிடும். அதைக் கருத்தில் கொண்டு, இதுவரை ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகள் மற்றும் இனி ஒத்திவைக்கப்படவுள்ள கடன் தவணைகள் மீதான வட்டியைத் தள்ளுபடி செய்யும்படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஆணையிட வேண்டும் என பா.ம.க. கோருகிறது.


 
தீர்மானம் 9 : மகளிர் சுயஉதவிக் குழு கடன் தவணைகளை நிறுத்திவைக்க வேண்டும்!

 

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்பு மற்றும் பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு, வங்கிகளில் இருந்து பெறப்பட்ட அனைத்து வகை கடன்களுக்குமான மாதத் தவணைகள் 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற கடன்களுக்கு இந்தச் சலுகை நீட்டிக்கப்படவில்லை. அதனால், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் கொடுத்த தனியார் வங்கிகளும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும் கடன்பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுப் பெண்களைத் தொடர்புகொண்டு கடன் தவணையை உடனடியாகச் செலுத்தும்படி நெருக்கடி கொடுக்கின்றனர். கடன் தவணை செலுத்த முடியாத நிலையில் இருக்கும் பெண்களுக்கு தனியார் வங்கிகளின் சார்பில் கடன் வசூல் செய்யும் குண்டர்கள் மூலம் மிரட்டல் விடுக்கப்படுகிறது. இத்தகைய மனிதநேயமற்ற செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

 

கரோனா வைரஸ் பரவலால் மற்றவர்கள் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, அதேபோல் தான் மகளிர் சுயஉதவிக் குழுவினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப் புரிந்துகொள்ளாமல் கடன் தவணையைச் செலுத்தும்படி, அவர்களை மிரட்டுவது நியாயமற்றதாகும். எந்த வகையில் மிரட்டினாலும் கடன் தவணையைச் செலுத்த முடியாத நிலையில் தான் மகளிர் சுயஉதவிக் குழுப் பெண்கள் உள்ளனர். எனவே, கரோனா அச்சம் தணிந்து, நிலைமை சீரடையும் வரை மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற கடன்களுக்கான தவணைத் தொகையைக் கட்டாயப்படுத்தி வசூல் செய்வதை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கைவிட வேண்டும் என ஆணையிடும்படி ரிசர்வ் வங்கியை இக்கூட்டம் கோருகிறது.

 

தீர்மானம் 10 : கரோனா வைரஸ் பரவல் தடுப்பு... அரசுக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கிய மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோருக்குப் பாராட்டு!

 

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்ப் பரவல் குறித்த புரிதலும், விழிப்புணர்வும் பெரிய அளவில் இல்லாத சூழலில், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதன் முதலில் வலியுறுத்தியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தான். இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டிருக்காவிட்டால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியிருக்கும்; உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்திருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பேரழிவைத் தடுத்து நிறுத்தியது முழு ஊரடங்கு தான் என்பதில் ஐயமில்லை.

 

அதேபோல், தமிழகத்தில் கரோனா வைரஸ் நோயைத் தடுப்பதற்காக தமிழக அரசுக்கு தொடர்ந்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி வருபவர் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். சென்னையில் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்; விதிகளை மீறுவோரிடம் வசூலிக்கப்படும் அபராதத்தின் அளவை உயர்த்த வேண்டும்; மக்களுடன் தொடர்புடைய பணிகளில் இருக்கும் வணிகர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் கரோனா ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்; பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும்; முகக் கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி வந்தவர் மருத்துவர் அய்யா அவர்கள் தான். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் தொலைபேசியில் பேசி பல்வேறு ஆலோசனைகளை மருத்துவர் அய்யா வழங்கினார். கரோனா பரவல் தடுப்புக்காக மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களும் தெரிவித்த பல்வேறு ஆலோசனைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மக்களைக் காக்கும் நோக்குடன் ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்கிய மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாசு ஆகியோருக்கு இச்செயற்குழு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.  

 

தீர்மானம் 11 : பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளின் இறுதிப்பருவத் தேர்வை ரத்து செய்யவேண்டும்!

 

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், கரோனா வைரஸ் அச்சத்தைக் காரணம் காட்டி தேர்வுகளை ரத்து செய்யக் கூடாது என மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திருப்பது நியாயமல்ல. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு நடைமுறை எதார்த்தங்களுக்கு ஒத்துவராததாகும்.

 

இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இப்போதுள்ள சூழலில் தேர்வுகளை நடத்த வாய்ப்பு இல்லை. நிலைமை சீரடைந்த பின் தேர்வு நடத்தி தான் முடிவுகளை வெளியிட வேண்டும் என்றால், அதற்குள்ளாக மாணவர்கள் உயர்கல்வி கற்க நினைக்கும் உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிடும். அதனால், மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பை இழந்துவிடுவார்கள். அதைத் தவிர்க்கும் வகையில், தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை பா.ம.க. செயற்குழு கோருகிறது.

 

தீர்மானம் 12 : 11ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வைத்த மருத்துவர் அய்யாவுக்கு நன்றி!

 

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவேண்டும்; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தான் முதன் முதலில் குரல் கொடுத்தார். அதை ஏற்று தமிழக அரசும் 9ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. அதன்பின், பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு தேர்வுகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டும் அவற்றை நடத்த முடியாத சூழல் உருவான நிலையில், அவற்றையும் ரத்து செய்துவிட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும் என்று கடந்த மாதம் மருத்துவர் அய்யா வலியுறுத்தினார். அதை ஏற்று, தமிழக அரசும் 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. மாணவர்களின் பாதுகாப்பு, நோய்ப்பரவல் தடுப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒன்றாம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வெற்றி பெற்ற மருத்துவர் அய்யா அவர்களுக்கு இச்செயற்குழு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது.

 

                    http://onelink.to/nknapp

 

தீர்மானம் 13 : வேடந்தாங்கல் சரணாலயப் பகுதிக்குள் தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்டது குறித்து விசாரணை தேவை!

 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான வேடந்தாங்கலில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தின் மையப் பகுதியை 1 கிலோமீட்டர் சுற்றளவைக் குறைக்க தமிழக வனத்துறை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அடுத்தடுத்து வினாக்கள் எழுப்பப்பட்ட நிலையில், சரணாலயத்தின் சுற்றுளவு குறைக்கப்பட வில்லை என்றும், சரணாலயப் பகுதியை மையப்பகுதி, இடைநிலைப் பகுதி, சுற்றுச்சூழல் பகுதி என வகைப்படுத்தும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாக வனத்துறை சார்பில் அளிக்கப்படும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது-. சரணாலயப் பகுதிக்குள் செயல்பட்டு வரும் தனியார் ஆலையின் விரிவாக்கத்திற்காகவே இந்த மாற்றங்கள் செய்யப்படுவதாகக் கூறப்படுவது குறித்து தமிழக வனத்துறை விளக்கம் அளிக்கவேண்டும். அதுமட்டுமின்றி, 2010 - 2011ஆம் ஆண்டுகளில் வேடந்தாங்கல் சரணாலய எல்லைக்குள் இரு தனியார் தொழிற்சாலைகளைத் தொடங்க தடையை மீறி அனுமதி அளித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. கோருகிறது.


 
தீர்மானம் 14 : காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்

 

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக மேட்டூர் அணையிலிருந்து  ஜூன் 12ஆம் நாள் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நிலையில், அப்பகுதிகளில் இப்போது தான் நடவுப் பணிகள்  தீவிரமடைந்துள்ளன.  ஆனால், மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு  முன்பே தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆழ்துளைக்கிணறு பாசனம் மூலம் உழவர்கள் குறுவை சாகுபடி மேற்கொண்டு இப்போது அறுவடை நடைபெற்று வருகிறது.

 

ஆனால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய காவிரி பாசன மாவட்டங்களில் இன்னும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், அறுவடை செய்யப்பட்டு, திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விட்டன. தொடர்ந்து அறுவடை நடைபெற்று வரும் நிலையில், இனியாவது நெல் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்க காவிரி பாசன மாவட்டப் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் தொடங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பா.ம.க. சிறப்புப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

 

தீர்மானம் 15 : தொடர்வண்டிச் சேவைகளைத் தனியார் மயமாக்கக்கூடாது

 

தமிழ்நாட்டில் 14 வழித்தடங்கள் உட்பட நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 தொடர்வண்டிச் சேவைகளைத் தனியார்மயமாக்க இந்தியத் தொடர்வண்டி வாரியம் முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தொடர்வண்டிகள் தனியார் மயமாக்கப்பட்டால், அவற்றின் சேவைத்தரம் உயரும் எனும் போதிலும், பயணக்கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும். அதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தொடர் வண்டிகளில் பயணம் செய்வது குறித்து நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்படும். அதனால், ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதைத் தடுக்கும் வகையில், தொடர்வண்டிச் சேவைகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.