Published on 24/08/2018 | Edited on 24/08/2018
செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடத்தப்படும். இதில் 75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் தொண்டர்கள் வரை கலந்து கொள்வார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள தயா திருமண மண்டபத்தில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில், இசக்கி முத்து, முபாரக் மந்திரி, மன்னன், கோபிநாதன் உள்பட ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஏரியாவில் இருந்து எத்தனை வாகனங்கள் வருகிறது. அந்த வாகனத்தில் எத்தனை பேர் வருகிறார்கள் என அழகிரி கேட்டுள்ளார்.
மேலும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள், ஓரங்கட்டப்பட்ட கட்சி நிர்வாகிகள், புறக்கணிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்று கேட்டு, அவர்களை தொடர்பு கொண்டு பேச சொல்லியிருக்கிறாராம்.
தென்மாவட்டங்கள் மட்டுமல்லாமல், திமுக வாக்கு வங்கி எங்கெங்கு குறைவாக உள்ளதோ, அந்தப் பக்கமும் கவனம் செலுத்தி ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளதாம். மேலும், பேரணி முடிந்த பின்னர் தென்மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள அழகிரி முடிவு செய்துள்ளார்.