
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மருத்துவ அணிச் செயலாளரும், ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான எழிலன் இன்று (18.03.2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வருகின்ற மார்ச் 22 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களை தொகுதி மறுசீரமைப்பு குறித்து கலந்தாய்வு செய்ய ஐசிடி ஹோட்டலுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். மாநில அளவில் அனைத்து கட்சிகளுடன் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டபோது, அந்த கூட்டத்தில் பல மாநிலங்களை ஒருங்கிணைத்து, தொகுதி மறுசீரமைப்புச் சிக்கலை முன்னெடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் செய்யப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை பிற மாநில தலைவர்களும் உணர வேண்டும் என 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினார்.
சென்ற வாரம் பல்வேறு குழுக்கள் அமைத்து, தமிழ்நாடு அமைச்சர்கள், எம்.பி.கள் என பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். கேரளா, ஆந்திரா, கர்நாடாகம், தெலுங்கானா, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில தலைவர்களை சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பைப் பெற்றுக் கொண்டவர்களும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசித்து இந்த கூட்டத்தில் பங்கேற்கிறோம் தெரிவித்துள்ளனர். அந்த நிகழ்ச்சி வரவுள்ளதாக அறிவித்துள்ளவர்கள் கேரளாவிலிருந்து பினராய் விஜயன், கோவிந்த், பினாய் விஷ்வம், கும்பகடி சுதாகரன், கேரள காங்கிரஸ் பி.ஜே. ஜோசப், கேரள காங்கிரஸ் ஜோசப் மணி, எம்.கே. பிரேம சந்திரன்; ஆந்திராவிலிருந்து மிதுன் ரெட்டி, தெலுங்கானாவில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கே.டி. ராமராவ், வினோத் குமார் எம்.பி.; கர்நாடாகவிலிருந்து துணை முதலமைச்சர் சிவகுமார் முதலான பலர் பங்கேற்க உள்ளனர்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாகத் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பாஜகவின் நிலைப்பாடு என்ன என தொடர்ந்து குரல் எழுப்பிவருகின்றனர். ஒத்திவைப்பு தீர்மானம் கேட்கிறார்கள். ஆனால் பாஜக அரசாங்கம் எதுவும் வாய் திறக்காமல் போகிறார்கள். இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பதை வெகுமக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என திமுகவும் இளைஞரணியும் மாவட்டத் தலைநகரங்கள், தொகுதிகள் தோறும் கூட்டங்கள் நடத்தி வருகின்றோம். களத்தில் மக்களிடம், மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும், தேசிய அளவில் பிற மாநில கட்சிகளிடமும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த விழிப்புணர்வை ஊட்டி, ஒருங்கிணைந்து வருகிறோம்.
பல்வேறு எதிர்ப்பு கேள்விகள், விவாதங்கள் வருகிறது. மக்கள் கணகெடுப்பு எடுத்த பிறகு தொகுதி சீரமைப்பு செய்வார்கள் என்று சொல்கிறார்கள். 1951இல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 7.5 லட்சம் இருந்தார்கள். அதனால் 496 இடங்கள் இருந்தது. பிறகு 1961 இல் மக்கள் கணக்கெடுப்பிற்கு பின் 8.4 லட்சம் பேர் 1 நாடாளுமன்ற உறுப்பினர் கணக்கு வந்தது. இதனால் 522 தொகுதிகள் வந்தது. 1971இல் மக்கள் தொகை கணகெடுப்பிற்கு பின் 10.1 லட்சம் பேர் எண்ணிக்கை இருந்தது. அதனால் 543 இடங்கள்.

குடும்ப கட்டப்பாடு திட்டம், பெண் கல்வி எங்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் இடங்களில் இந்த திட்டம் வெற்றி பெற்றது. அதற்கு தமிழ்நாடு ஒரு எடுத்துக்காட்டு. 1976, 42வது சட்டதிருத்ததின் அடிப்படையில் இந்த தொகுதி சீரமைப்பு பணிகள் என்பதை ஒரு 25 வருடம் தள்ளிவைக்கலாம் என்று சொன்னார்கள். அந்த காலம் 2001 வரை வந்தது, 1999இல் கலைஞர் கடிதம் எழுத்தினார். தெலுங்கு தேசத்தில் இருந்து சந்திரபாபு நாயுடு கடிதம் எழுத்தினார். அந்த கடிதம் அடிப்படையில் வாஜ்பாய் இன்னும் 25 வருடங்கள் தள்ளி வைத்தார். இப்போது 2026 அந்த காலம் முடிக்கிறது. இதன்பின் 2026இல் தொகுதி சீரமைப்பை இவ்வாறு செய்யப்போகிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது. இது நியாயமான கேள்வி. 2026 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக 2025இல் தான் குரல் எழுப்ப முடியும், இதற்காக தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகள் மட்டுமில்லாமல், பிற மாநில கட்சி தலைவர்களும் குறிப்பிட்டு காட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு தொகுதி குறையாது, இடம் குறையாது என சொல்கிறார்கள். ஆனால் சதவிகதம் உயர்கிறது. புரோ - ரேடா (Pro-rata) எதன் அடிப்படையில் என்றுதான் கேட்கிறோம். 2026 மக்கள் தொகை அடிப்படையில் 840 இடங்கள் இருந்தால், உத்திரபிரதேசத்தின் இடங்கள் 80லிருந்து 143 இடங்களாக அதிகரிக்கிறது. பீகாரின் இடங்கள் 40லிருந்து 79 இடங்கள் அதிகரிக்கிறது. மத்திய பிரதேசத்தின் 29லிருந்து 52 இடங்கள் அதிகமாகிறது. ஆனால், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதே அளவில் குறைவாகதான் இருக்கும். சமூக நிதி கொள்கையிலும் சரி, இரு மொழி கொள்கையிலும் சரி, தேசிய கல்வி கொள்கையிலும் சரி தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டேதான் இருக்கிறோம். உரிமைக்கான குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்க நமது பிரதிநிதித்துவம் இருந்தால்தான் முடியும்.

உத்திர பிரதேசம் ஏற்கனவே 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்துள்ளனர். 17% கீழ் பிரதிநிதித்துவம் இருக்கிறது. 8 பிரதமர்கள் அந்த மாநிலத்திலிருந்து வந்திருக்கிறார்கள். தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், ஹிந்தி, சமஸ்கிருதம் என நான்கு மாநிலங்கள் முடிவு செய்தால் பிற மாநிலங்கள் ஏற்றுக்கொண்டு ஆகவேண்டிய நிலை உருவாகும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் அடிப்படையான குரல் என்ன?. 400 இடங்கள் நாங்கள் ஜெயிப்போம் என சொன்னார்கள், இந்தியா கூட்டணி அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் கூட்டணி என்பதால்தான் அவர்கள் 240 இடங்கள் அவர்கள் கீழே சென்றார்கள். இது வெறும் அரசியல் கட்சியின் குரல் மட்டும் இல்லை, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் குரல், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்கும் குரல், மாநிலங்களுக்கு நீதியை பாதுகாக்கும் குரல். மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற எண்ணிக்கை அதிகப்படுத்தினால், தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பயங்கரமாக பாதிக்கப்படும்.
10வது நிதி குழுவிலிருந்து 15வது நிதிக்குழு வரை, கர்நாடகாவிற்கு 5.9ல் இருந்து 3.6% தான் வரிகளின் பகிர்வாக இருக்கிறது. கேரளாவிற்கு 3.9 ஆக இருந்து 1.9 ஆக குறைந்துள்ளது, தமிழ்நாட்டிற்கு 6.6ல் இருந்து 4.08 ஆக குறைந்துள்ளது. இதனால் ஒரு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிடு செய்யும் போது அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப குறைக்கப்படுகிறது. ஆனால், தென் மாநிலங்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு 30ல் இருந்து 40% விகிதங்கள் கொடுக்கிறார்கள். இவற்றை உணர்ந்துதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் களம் அமைக்கிறார். நியாத்தை கேட்கிறார். ஒன்றிய அரசுக்கு கேட்க வைக்கும் முயற்சியாகதான் வருகின்ற கூட்டத்தைப் பார்க்கிறோம். ஒரு காலத்தில் குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை குறித்து பேசியிருக்கிறார், நீட் எதிர்ப்பு குறித்து பேசியிருக்கிறார், நிதி பகிர்வு குறித்து எல்லாம் பேசியிருக்கிறார். ஆனால் அவர் பிரதமர் ஆனவுடன் அவரின் அடிப்படைத் தத்துவங்கள் எல்லாம் மாறிவிட்டது” என்றார்.