Skip to main content

“பக்தரின் உயிரிழப்புக்கு திமுக அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு” - இ.பி.எஸ்.!

Published on 16/03/2025 | Edited on 16/03/2025

 

EPS says DMK govt and Charities Minister are fully responsible for the devotee  lost his life

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (16.03.2025 - ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் வழக்கத்திற்கு அதிகமாக பக்தர்கள் கூடினர். இத்தகைய சூழலில் தான் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் 100 ரூபாய் கட்டண வரிசை மற்றும் இலவச தரிசனம் என சாமி தரிசனம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வதற்காக 100 ரூபாய் கட்டண வரிசையில் காத்திருந்தார்.

அப்போது நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்த அவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓம்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவப் பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய 100 ரூபாய் கட்டண வரிசையில் காத்திருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் திருச்செந்தூர் கோயிலுக்கு திமுக அரசின் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு சென்றிருந்தார். அப்போதே, கோயிலில் கட்டண வரிசை உட்பட அனைத்து தரிசன வழிகளிலும் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படுவதை மக்கள் முறையிட்டனர். அப்போது, ‘திருப்பதிக்கு போறான், 24 மணி நேரம் நிப்பான்’ என்று பக்தர்களின் உணர்வுகளையும் முறையிடலையும் உதாசீனப்படுத்தி பேசியதோடு அல்லாமல், கூட்ட நெரிசலைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இன்றைய உயிரிழப்புக்கு காரணம்.

எனவே, பக்தர் ஓம்குமாரின் உயிரிழப்புக்கு திமுக அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு. திருப்பணி என்பது பக்தியுடன் செய்யப்பட வேண்டியது. ஆனால், பகல்வேஷம் போடும் இந்த ஆட்சியில் அதுவும் வெறும் விளம்பர நோக்கத்தில் மட்டும் தான் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணம் இந்த அரசுக்கு துளியும் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது. உயிரிழந்த ஓம்குமாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், இனியேனும் இந்த விளம்பர நாடகங்களை எல்லாம் விட்டுவிட்டு, அறநிலையத்துறையை அதற்குரிய அறத்துடன் வழிநடத்த வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்