
கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் இருந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
மாலை 7 மணி நிலவரப்படி காங்கிரஸ் 136 இடங்களிலும், பாஜக 65 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. இதில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக 131 இடங்களிலும், பாஜக 60 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 131 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்நிலையில், இன்று காலை காங்கிரஸ் 136 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த போது செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “கர்நாடகாவில் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தை மக்கள் நிராகரித்துவிட்டனர். இது பிரமர் மோடியின் மீது மக்களின் நம்பிக்கையின்மையை காட்டுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் உள்ளூர் பிரச்சனைகளை எடுத்து பேசியது. அதனை ஏற்ற மக்கள் மோடியின் பிரிவினைவாத பிரச்சனையை நிராகரித்துவிட்டனர். வாழ்வாதாரம், உணவு பாதுகாப்பு, விவசாயிகளின் பிரச்சனை, மின் விநியோகம், பிரிவினைவாதம் எதிர்ப்பு உள்ளிட்டவற்றை காங்கிரஸ் கையில் எடுத்து வென்றுள்ளது. இனி கர்நாடகாவில் சமூக நல்லிணக்கமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்” என்று தெரிவித்தார்.